Image: indianexpress.com
ரஞ்சி ஜே.எஸ்.சீ.ஏ. சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று வெள்ளிக்கிழமை (27) நடைபெற்ற முதலாவது சர்வதேச இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை 21 ஓட்டங்களால் நியூஸிலாந்து வெற்றிகொண்டது.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபது கிரிக்கெட் தொடரில் நியூஸிலாந்து 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் முன்னிலை அடைந்துள்ளது.
அதிரடி ஆட்டக்காரர்களான டெவன் கொன்வே, டெறில் மிச்செல் ஆகிய இருவரும் குவித்த அரைச் சதங்கள், மிச்செல் சென்ட்னர், மிச்செல் ப்றேஸ்வெல், லொக்கி பெர்குசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு என்பன நியூஸிலாந்தின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.
இந்தியாவின் முன்வரிசை வீரர்கள் பிரகாசிக்க தவறியதை தொடர்ந்து சூரியகுமார் யாதவ், வொஷிங்டன் சுந்தர் ஆகிய இருவரும் அணியின் வெற்றிக்காக எடுத்த முயற்சிகள் கைகூடாமல் போயின.
போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து, 176 ஓட்டங்களை குவித்தது.
அர்ஷ்தீப் சிங் வீசிய கடைசி ஓவரில் டெறில் மிச்செல் 3 சிக்ஸ்கள் உட்பட 26 ஓட்டங்களை குவித்ததுடன் நோ போல் மூலம் உதிரி ஒன்றும் கிடைத்தது. அதுவே ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது.
பின் அலன் (37), டெவன் கொன்வே ஆகிய இருவரும் அதிரடியாக துடுப்பெடுத்தாடி, 28 பந்துகளில் 43 ஓட்டங்களை பகிர்ந்து, சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், அலென், மார்க் செப்மன் (0) ஆகிய இருவரும் ஒரே ஓவரில் அதே எண்ணிக்கையில் ஆட்டமிழந்தனர்.
எனினும், டெவன் கொன்வே (17), க்ளென் பிலிப்ஸ் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 47 பந்துகளில் 60 ஓட்டங்களை பகிர்ந்து அணியை பலப்படுத்தினர்.
டெவன் கொன்வே 35 பந்துகளில் 7 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 52 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழக்க, அவரை தொடர்ந்து மேலும் இருவர் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளுடன் வெளியேறினர்.
மறுபக்கத்தில் டெறில் மிச்செல் 30 பந்துகளில் 5 சிக்ஸ்கள், 3 பவண்டறிகளுடன் ஆட்டமிழக்காமல் 59 ஓட்டங்களை குவித்தார்.
இந்திய பந்துவீச்சில் வொஷிங்டன் சுந்தர் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து, 155 ஓட்டங்களை பெற்று தோல்வி அடைந்தது.
ஹார்திக் பாண்டியாவின் தலைமையிலான இந்தியாவின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
ஷுப்மான் கில் (7), இஷான் கிஷான் (4), ராகுல் த்ரிபதி (0) ஆகிய மூவரும் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க இந்தியாவின் மொத்த எண்ணிக்கை வெறும் 15 ஓட்டங்களாக இருந்தது.
சூரியகுமார் யாதவ் (47), ஹார்திக் பாண்டியா (21) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 68 ஓட்டங்களை பகிர்ந்தபோதிலும், ஓட்ட வேகம் போதுமானதாக இருக்கவில்லை.
அவர்கள் இருவரும் ஆட்டமிழந்ததும் இந்திய வீரர்களை நியூஸிலாந்து பந்துவீச்சாளர்கள் இலகுவாக ஆட்டமிழக்கச் செய்தனர்.
வொஷிங்டன் சுந்தர் மிக திறமையாக துடுப்பெடுத்தாடி, 28 பந்துகளில் 5 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 50 ஓட்டங்களை பெற்றார்.
நியூஸிலாந்து களத்தடுப்பாளர்கள் 3 இலகுவான பிடிகளை தவறவிட்டதால், இந்தியா படுதோல்வியிலிருந்து தப்பித்துக்கொண்டது.
நியூஸிலாந்து பந்துவீச்சில் மிச்செல் சென்ட்னர் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மைக்கல் ப்றேஸ்வெல் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் லொக்கி பேர்கசன் 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
நன்றி...
வீரகேசரி
0 Comments