சில மாதங்களுக்கு முன்பு மாலைத்தீவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில், சீன ஆதரவாளராக கருதப்படும் முகமது முய்சு (Mohamed Muizzu) வெற்றி பெற்றார்.
அவர் ஜனாதிபதியாக பதவி ஏற்றதுமே மாலைத்தீவில் இருந்து இந்திய படைகள் உடனே வெளியேற வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி சில தினங்களுக்கு முன், இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவுக்கு சென்று அங்கு இந்தியர்களை சுற்றுலாவிற்கு ஈர்க்கும் முயற்சியாக பல இயற்கை எழில் மிகுந்த பல காட்சிகளை தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டு அத்தீவின் சிறப்புகளை வர்ணித்து இருந்தார்.
ஆனால், பிரதமரின் முயற்சியை மாலைத்தீவை சேர்ந்த 3 அமைச்சர்கள், சர்ச்சை கருத்துகள் வெளியிட்டு விமர்சித்திருந்தனர்.
இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியர்கள் பலர் மாலைத்தீவிற்கு சுற்றுலா செல்வதை இரத்து செய்தனர்.
இதற்கிடையே, 5 நாள் பயணமாக சீனா சென்றிருந்த மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு கூறியதாவது:
“.. இந்திய பெருங்கடல் (Indian Ocean), அதில் அமைந்துள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. இந்தியப் பெருங்கடலில் 9 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பிரத்யேக பொருளாதார மண்டலமாக மாலத்தீவு உள்ளது. இப்பெருங்கடலில் மாலைத்தீவிற்கும் பங்கு உண்டு.
நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது.
நாங்கள் எந்த நாட்டின் கொல்லைப்புறத்திலும் இல்லை. நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.
சீனா மாலைத்தீவின் உள்நாட்டு விவகாரங்கள் எதிலும் தனது செல்வாக்கை செலுத்தாது…”
0 Comments