அல்லாஹ்வின் விருந்தாளியாக எம்மை நோக்கி வந்த ரமழான் எமக்கு பல பயிற்சிகளையும், வரப்பிரசாதங்களையும், வாய்ப்புகளையும் வாரி வழங்கிவிட்டு எம்மை விட்டு பிரிந்து சென்று விட்டது. நிச்சயமாக அது நம் பற்றிய சாட்சியங்களை அல்லாஹ்விடம் பதிவு செய்திருக்கும். அதனை நாம் எவ்வாறு பயன்படுத்தினோம்? அது கொண்டு வந்த அருட்பாக்கியங்களில் எதனை நாம் பெற்றுக் கொண்டோம்? அது எமக்கு கற்றுத் தந்த பாடங்களில் எதனை எடுத்துக் கொண்டோம்? என்பன போன்ற பல கேள்விகளை மையப்படுத்தியதாக அந்த சாட்சியம் அமையும்.
ரமழான் கற்றுத்தந்த பாடங்களில் உன்னதமான ஒரு பாடம் பொறுமை. மனிதனுக்கு பொறுமை எனும் உயர் பண்பை கற்றுக் கொடுப்பதில் ரமழான் அளப்பரிய பங்கினை வகிக்கின்றது. இதனால்தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் ரமழான் பொறுமையின் மாதம் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ரமழான் எமக்கு கற்றுத் தந்த பொறுமை எனும் பாடத்தை ரமழான் மாதத்தில் மட்டுமன்றி இதர காலங்களிலும் கடைப்பிடிப்பது கட்டாயமானதாகும். குறிப்பாக, நாம் வாழும் இன்றைய வேகமான உலகில் இதன் தேவை வெகுவாக உணரப்படுவதை எவராலும் மறுக்க முடியாது.
பொறுமை ஓர் உலகளாவிய தேவை என்பதை இன்றைய உலகின் செயற்பாடுகள் நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. பொறுமை இழந்த மனிதர்களின் செயற்பாடுகள் இவ்வுலகையே அழித்துக் கொண்டிருப்பதை கண்ணூடாக நாம் கண்டு கொண்டிருக்கிறோம். அதனால் பொறுமையின் சிறப்பையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்து செயற்பட வேண்டும். அது ஈருலகிலும் விமோசனம் பெற்றிட வழிவகுக்கக்கூடியதாகும்.
பொறுமை என்பது நற்பண்புகளின் தாய் என வர்ணிக்கப்படும் ஒரு மகத்தான பண்பு. இஸ்லாத்தின் அடிப்படையே பொறுமைதான். ஒரு மனிதன் நன்மைகளையும், நற்கருமங்களையும் செய்வதற்கும், பாவங்களிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கும், சோதனைகள், துன்பங்கள் வரும்போது முறையாக அவைகளை எதிர்கொண்டு, வாழ்வில் சமநிலையோடு பயணிப்பதற்கும் தேவையான அடிப்படைப் பண்பே பொறுமைதான். பொறுமை என்பது மனித பண்பு மட்டும் அல்ல, அது இந்த பேரண்டத்தின் பண்பு. ஒரு பயிர் எவ்வாறு வளர்கின்றது? இன்று விதை விதைத்து நாளை அறுவடை செய்ய முடியாது. தாயின் கருவறையில் இருக்கும் குழந்தை, அது வெளிவர பத்து மாதங்கள் தேவைப்படுகின்றன. இன்று உருவாகி நாளையே அது வெளிவருவதில்லை. அப்படி வந்தால் அதன் நிலை எவ்வாறிருக்கும் என்பது தெளிவானது. உலகமே பொறுமையுடன்தான் இயங்குகின்றது.
பொறுமை என்றால் ‘மனதை கட்டுப்படுத்தல்’ என்றே பொருள் கொள்ளப்படுகின்றது. மனக்கட்டுப்பாடின்றி வாழும் மனிதனின் வாழ்வு மடிந்து போய்விடும். பொறுமை இழந்த மனிதன் ஒட்டுமொத்த வாழ்வையும் இழந்து விடுவான். இதனால் தான் இஸ்லாம் பொறுமை எனும் உயர் பண்பிற்கு ஆழ்ந்த முக்கியத்துவத்தை கொடுத்திருக்கின்றது. அல்குர்ஆனில் 90க்கும் அதிகமான இடங்களில் பொறுமை குறித்து கூறப்படுகிறது. வேறு எந்த நற்பண்பு குறித்தும் இந்த அளவு அதிகமாக கூறப்படவில்லை.
பொறுமையின் வகைகள்
(1) பாவங்களில் இருந்து ஒரு மனிதன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக செய்யும் பொறுமை. உதாரணமாக, ஒரு மனிதன் விபசாரத்தில் ஈடுபடுவதற்கான வாய்ப்பு கிட்டும் பொழுது அல்லாஹ்வைப் பயந்து, தன்னை கட்டுப்படுத்தி, அதிலிருந்து ஒதுங்கிக் கொள்வதற்காக தேவைப்படுவது பொறுமையே.
(2) அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்கும், அவனுக்கு விருப்பமான கருமங்களை செய்வதற்கும் ஒரு மனிதனுக்கு தேவைப்படும் பொறுமை. உதாரணம், உறக்கத்தில் இருக்கின்ற ஒரு மனிதன் அவ்வின்பமான உறக்கத்தை முறித்துக் கொண்டு, தொழுகைக்கு செல்வதற்கு தேவைப்படுவது பொறுமைதான்.
(3) சோதனைகள், துன்பங்கள், இடர்கள் ஏற்படும் போது அவைகளை எதிர்கொள்ள தேவைப்படும் பொறுமை. இவைகளை பொறுமையுடன் எதிர்கொள்ள தைரியமற்ற மனிதன் தற்கொலை வரை சென்றுவிடுவதை நாம் காண்கிறோம். எனவே பொறுமை எனும் இவ்வுயரிய பண்பு மிக விசாலமாகவும் ஆழமாகவும் நோக்கப்பட வேண்டியது என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வகைகளின் ஊடாக புரிந்து கொள்ளலாம்.
இவ்வுயரிய பண்பை தன்னகத்தே அணிந்து கொள்கின்ற மனிதன் இறைவன் புறத்திலிருந்து பல வழிகளிலும் ஆசீர்வதிக்கப்படுகின்றான். குறிப்பாக ஒரு பொறுமையாளன் மூன்று வகையான பரிசில்களை பெற்றுக் கொள்கின்றான்.
(1) அல்லாஹ் உடன் இருத்தல் என்னும் வெகுமானத்தைப் பெற்றுக் கொள்கிறான். இதனை அல்லாஹுத்தஆலா இவ்வாறு குறிப்பிடுகின்றான். ‘நிச்சயமாக இறைவன் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்’
(அல்குர்ஆன் 2:153)
(2) அளவின்றி கூலிகளை பெற்றுக்கொள்ளல் என்னும் பரிசும் வழங்கப்படுகின்றது. இது பற்றி திருக்குர்ஆன் இவ்வாறு இயம்புகின்றது ‘பொறுமையாளர்களுக்கு அவர்களின் கூலி அளவின்றி வழங்கப்படும்’.
(அல்குர்ஆன் 39:10.)
(3) இறைவனின் நேசம் அவர்களுக்கு கிட்டுகின்றது. இது பற்றி அல்லாஹ் இவ்வாறு குறிப்பிடுகின்றான், ‘பொறுமையாளர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்’
(அல்குர்ஆன் 3:146)
பொறுமையாளர்கள் பற்றியும், பொறுமையாளர்களுக்கு கிடைத்த வெற்றிகள் பற்றியும் புனித குர்ஆன் பல இடங்களில் குறிப்பிடுகின்றது. அந்த வகையில் நபி நூஹ் (அலை) அவர்கள் குறித்து கூறும் போது, அவர் 950 ஆண்டுகள் வாழ்ந்த வாழ்க்கையை ஹுத் என்னும் அத்தியாயத்தில் அல்லாஹ் விவரிக்கின்றான். அனைத்தையும் கூறிய பின் இறைவன் இவ்வாறு உபதேசிக்கின்றான்.
‘எனவே பொறுமையை மேற்கொள்வீராக’ (அல்குர்ஆன் 11:49) 950 ஆண்டுகால வாழ்வின் வரலாற்றுக் கதையின் சுருக்கம். பொறுமையை மேற்கொள்வீராக என்பது என்றால் பொறுமை என்பது எவ்வளவு முக்கியமானது என மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.
பொறுமையின் முக்கியத்துவத்தை பின்வரும் நபிமொழி மூலம் நபி (ஸல்) அவர்கள் உணர்த்துகிறார்கள். பொறுமையை விட சிறந்த விரிவான எந்த ஒரு அருளும் எவருக்கும் கொடுக்கப்படவில்லை’.
(ஆதாரம்: புஹாரி).
இவ்வுலக வாழ்வை சமநிலையோடும், மகிழ்ச்சியோடும் கழிப்பதற்கான அச்சாணியாகவும், அருளாகவும் நபி (ஸல்) அவர்கள் பொறுமையை அடையாளப்படுத்தி உள்ளார்கள். தனது வாழ்க்கையில் சந்தித்த ஒவ்வொரு சவால்களையும், சோதனைகளையும் பொறுமையோடும் சகிப்புத்தன்மையோடும் சந்தித்து பல சாதனைகளையும், வெற்றிகளையும் நிலை நாட்டியதற்கான பல செழுமையான முன்னுதாரணங்களை எமக்காக விட்டுச் சென்றுள்ளார்கள்.
எனவே நாம் அவைகளில் இருந்து பாடங்களை பெற்று வாழ வல்ல அல்லாஹ் துணை புரியட்டும்.
கலாநிதி, அல்ஹாபிழ்
எம்.ஐ.எம். சித்தீக்…
(அல்-ஈன்ஆமி)
B.A.Hons, (Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)
0 Comments