
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் கலீதா ஸியாவின் மகனும், அந்தநாட்டின் முக்கிய எதிர்க்கட்சியான பங்களாதேஷ் தேசியக் கட்சியின் தற்காலிகத் தலைவருமான தாரிக் ரஹ்மான் (60), 17 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று லண்டனில் இருந்து பங்களாதேஷ் திரும்பினார்.
கடந்த 2008-ஆம் ஆண்டு அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கைகள் காரணமாக நாட்டை விட்டு வெளியேறி லண்டனில் தஞ்சம் புகுந்த அவர், இன்று டாக்காவை வந்தடைந்தார்.
அங்குள்ள ஹஸ்ரத் ஷாஜலால் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய அவரை வரவேற்பதற்காக விமான நிலையம் முதல் நகரின் முக்கிய வீதிகள் வரை லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் திரண்டிருந்தனர்.
சுமார் 50 லட்சம் ஆதரவாளர்களைத் திரட்டி அவருக்குப் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க அவரது கட்சி திட்டமிட்டிருந்தது. அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தாரிக் ரஹ்மான் நாடு திரும்பியிருப்பது அந்த நாட்டு அரசியலில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் அந்தத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
நீண்ட நாட்களாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தமது தாயார் கலீதா ஸியாவை (80) அவர் நேரில் சந்தித்து ஆசி பெறவுள்ளார்.
தாரிக் ரஹ்மானின் வருகையை முன்னிட்டு டாக்காவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இடைக்கால அரசாங்கத்தின் அறிவுறுத்தலின் பேரில் காவல்துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினர் விமான நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஷேக் ஹசீனாவின் ஆட்சி கடந்த ஆண்டு கவிழ்ந்த பிறகு, பங்களாதேஷ் தேசியக் கட்சி (BNP) மீண்டும் புத்துயிர் பெற்று வரும் சூழலில் தாரிக் ரஹ்மானின் இந்த வருகை மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.



0 Comments