Trending

6/recent/ticker-posts

சிறுவர் துன்புறுத்தல்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம்...!


நாட்டின் சிறுவர் உரிமைகள் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்டு, சிறுவர்கள் உடலியல் ரீதியாக தண்டனைக்கு உள்ளாவதைத் தடுக்கும் வகையில்,தண்டனை சட்டக்கோவை குற்றவியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

மேற்படி சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி, அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச ஆகியோரால் சமர்ப்பிக்கப் பட்டுள்ள இணைந்த யோசனைக்கே, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க உடல் ரீதியாகவோ அல்லது உள ரீதியாகவோ சிறுவர்களுக்கு வழங்கப்படும் எந்த ஒரு தண்டனையும் சட்டத்தின்படி குற்றமாகக் கருதும் வகையில் இந்த சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு நேற்று தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,

நல்லதையே சிறுவர்களுக்கு வழங்க வேண்டும் என்றால் கேட்டதை அவர்களுக்கு வழங்குவதை தடுக்க வேண்டும். இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூடுதல் கவனம் செலுத்தியுள்ளார். இதன்படி, வீடுகள், பாடசாலைகள் உள்ளிட்ட சகல துறைகளிலும் சிறுவர்களுக்கு உடல் ரீதியான தண்டனைகள் விதிப்பது தடை செய்யப்பட உள்ளது. இந்நியதிகளை உள்ளடக்கி தண்டனைச் சட்டக் கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைச்

சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்காக ஜனாதிபதியினால் இந்த யோசனை முன் வைக்கப்பட்டுள்ளது.

அண்மைக் காலங்களில் ஊடகங்கள் மூலம் சிறுவர்களுக்கு வழங்கப்படும் மனிதாபிமானமற்ற பல்வேறு தாக்குதல்கள் தொடர்பில் பெருமளவில் தகவல்கள் வெளியிடப்பட்டதை காண முடிந்தது.

அந்த வகையில் இனிமேல் சிறுவர்களுக்கு எந்த விதத்திலும் உடல் ரீதியிலும் உள ரீதியிலும் தண்டனைகள் வழங்குவதை தடுக்கும் வகையில், சட்டத்தில் சம்பந்தப்பட்ட சரத்துக்கள் திருத்தம் செய்யப்படவுள்ளன. உடல் ரீதியான தண்டனையை முடிவுக்கு கொண்டு வரும் சர்வதேச தினம் நேற்று முன்தினம் 30ஆம் திகதி சிறப்பிக்கப்பட்டது.

இதற்கு சமகாலத்தில் மேற்படி சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இந்நிலையில் நாட்டின் அனைத்து சிறுவர்களுக்குமான உரிமைகள் மற்றும் நலன்களை பாதுகாப்பதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

அந்த வகையில் சிறுவர்களுக்கு தேவையான சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்படும் அதே வேளை,வயது வந்தவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோரால் உடல் ரீதியாகவோ உளரீதியாகவோ எந்தவித தண்டனையையும் வழங்குவது சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு செயற்படுபவர்கள் குற்றவாளிகளாக கருதப்படுபவர். இதுகுறித்து இந்த சட்ட திருத்தத்தில் விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments