Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பொறாமையின் விபரீதங்கள்...!


பொறாமை என்பது ஓர் உள நோயாகும். இது ஓர் இறை விசுவாசியிடம் இருக்கக்கூடாத கெட்ட குணம். ஒரு முஃமின் தான் விரும்புவதை தனது சகோதரனுக்கும் விரும்பாதவரை அவர் பூரண விசுவாசியாக முடியாது என்பது நபியின் வாக்கு. ஆகவே பிறர்மீது பொறாமை கொள்ளல் ஈமானை பலவீனப்படுத்திவிடும்.

பொறாமை என்பது ஒருவர் தன் சகோதரனிடம் இருக்கும் ஓர் இறையருள் தனக்கு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை அவரிடம் அது இருக்காது நீங்க வேண்டும் என்ற குறுகிய மனநிலை கொள்வதற்கு பொறாமை எனப்படும். இது ஒரு சைத்தானிய குணமாகும். இப்லீஸ் ஆதம் (அலை) அவர்களுக்கு சிரம் பணியுமாறு அல்லாஹ் கட்டளையிட்டபோது ஆணவம் மற்றும் பொறாமையின் காரணத்தினாலேயே அதற்கு அடிபணிய மறுத்தான். அதனால் சுவனத்திலிருந்து வெளியேற்றப்பட்டு மறுமைநாள் வரைக்கும் சபிக்கப்பட்ட, தூக்கி வீசப்பட்ட கேவலமான ஒரு நிலையை அவன் அடைந்தான். இவ்வாறே ஆதம் நபியின் இது புதல்வர்களில் ஒருவர் மற்றவர் மீது பொறாமை கொண்டதனால் அவரைக் கொலைசெய்யும் நிலை ஏற்பட்டது. இவ்வாறே யூசுப் நபியின் சகோதரர்கள் யூசுபின் மீது பொறாமைப்பட்டு அவர்களை பாழடைந்த கிணற்றில் தள்ளி விட்டனர்.

பிறர் மீது பொறாமைப்படும் துர்க்குணம் கெட்டவர்களிடம் மாத்திரம் இருப்பதில்லை. சிலவேளை நல்லவர்களிடத்தில் கூட அது வந்து விடலாம்.

பொறாமை கொள்பவனுக்கு அவனது பொறாமையால் தன் எதிரிக்கு தீங்கு செய்ய முடிவதில்லை. மாறாக தனக்குத் தானே குழி வெட்டி அதில் தானே விழுந்து வேதனைப்படும் நிலை ஏற்படும். மறுமையில் தனது நற்செயல்களை தானே அழித்துக் கொள்ளும் ஒரு துரதிஷ்ட நிலை இதற்கும் அவன் உள்ளாவான்.

யூதர்களிடம் குடி கொண்டிருந்த பொறாமை மற்றும் பல இழி செயல்களினால் அல்லாஹ்வின் சாபத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகி அவர்கள் குரங்குகளாகவும் பன்றிகளாகவும் மாற்றப்பட்டதாக அல்குர்ஆன் கூறுகின்றது.

நபியவர்கள் மீது கொண்ட பொறாமையினால் யூதர்கள் நபியவர்களை ஏற்க மறுத்ததன் விளைவு நபியவர்களின் தயவிலேயே அவர்கள் வாழ வேண்டிய நிலையை அல்லாஹ் மதீனாவில் தோற்றுவித்தான் . பின்னர் அவர்கள் மதீனாவை விட்டு வெளியேற்றப்பட்டு கேவலமடைந்த நிலைக்கும் உள்ளானார்கள். அவர்களின் பொறாமையும் இழி குணங்களுமே இதற்கு காரணமென அல் குர்ஆனும் ஹதீஸுகளும் எடுத்தியம்புகின்றன.

பொறாமை கொள்வதால் ஒரு மனிதனுக்கு ஏற்படும் பாதிப்புகளை இரு வகையாகப் பிரிக்கலாம். அவற்றில் ஒன்று உலகம் சார்ந்தவை. மற்றவை மறுமை சார்ந்தவை. பொதுவாக பொறாமை கொள்வது ஒரு பெரும் பாவமும் ஹராமுமாகும். நபி (ஸல்) கூறுகின்றார்கள். மக்களே நீங்கள் பொறாமை கொள்ளாதீர்கள்! பகைமை பாராட்டாதீர்கள்! கோபப்படாதீர்கள்! அல்லாஹ்வின் நல்லடியார்களாகவும் சகோதரத்துவத்துடனும் வாழுங்கள். (ஆதாரம்: புஹாரி)

ஒரு முஸ்லிம் பொறாமை கொள்வதால் பொறாமைக்காரனின் நற்செயல்கள் பொறாமை கொள்ளப்பட்டவரின் ஏட்டுக்கு மாற்றப்படுகின்றன. இறுதியில் நன்மைகள் பல செய்தும் வங்குரோட்டு நிலையடைந்து நரகம் செல்லும் துர்ப்பாக்கியத்தை பொறாமை பெற்றுத் தருகின்றது.

‘நீங்கள் பொறாமைப் படுவதை எச்சரிக்கின்றேன். ஏனெனில் நெருப்பு விறகை எரிப்பது போல் பொறாமை நற்காரியங்களை அழித்து விடும்’ என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: அபுதாவுத்)

இதேவேளை பொறாமை கொள்வதால் இறைவனின் கோபமும் அவனது பொது மன்னிப்புக்கான தகுதியை இழக்கும் நிலையும் ஏற்படலாம்.

ஒரு தடவை நபி(ஸல்) அவர்கள், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் அடியார்களின் நல்லமல்கள் இரு தடவைகள் இறைவனிடம் எடுத்துக்காட்டப்படுகின்றன. அவர்களின் அதிகமானோருக்கு பொது மன்னிப்பளிக்கும் அல்லாஹ் ஒருவருக்கொருவர் பொறாமையுடனும் வஞ்சகத்துடனும் இருந்தவர்களைப் பார்த்து இவ்விருவரும் தனது பொறாமையை விட்டு நீங்கி ஒற்றுமையாகும் வரை அவர்களின் பாவங்களை அப்படியே விட்டு வையுங்கள் என்று கூறி விடுகின்றான். 
(ஆதாரம் : முஸ்லிம்)

ஆகவே பொறாமையை தவிர்த்து அல்லாஹ்வின் அருளையும் அன்பையையும் அடைந்து கொள்ள முயற்சிப்போம்.

மௌலவி ஏ.ஜி.எம்.ஜெலீல்…
(மதனி) பகுதித் தலைவர், விரிவுரையாளர்,
மஃஹதுஸ் ஸுன்னா அரபுக் கல்லூரி,
காத்தான்குடி.

Post a Comment

0 Comments