அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அமைப்பின் தலைவர் அஷ் சேக் முஃப்தி ஏ.ஜே.ஏ. ரிஷ்வி, அஷ் சேக் அர்கம் நுரஅமித் மற்றும் கலாநிதி ஏ.ஏ.அஹமட் அஷ்வர் ஆகியோரை தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க இன்று(21) சந்தித்தார்.
இந்த சந்திப்பு ஜயந்த வீரசேகர மாவத்தையில் அமைந்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது.
இன்றளவில் நாட்டில் நிலவுகின்ற அரசியல் நிலைமைகள் பற்றி முஃப்திமார்களுடனும் நிர்வாக மௌலவிமார்களுடனும் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான நல்லாசியையும் பெற்றுக்கொண்டார்.
ஜம்மியத்துல் உலமா சபையை சந்தித்த அனுர அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தார்.
“நான் சொன்ன ஒரு கருத்தை திரிபு படுத்தி முஸ்லிம் மக்களுக்கு மத்தியில் சில அரசியல் வாதிகள் சேறு பூசுகின்றனர்.
நான் சொன்ன விடயத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக சிங்கள சமூகத்துக்குள் உள்ள அடிப்படைவாதிகளால் அங்கு அசாதாரண நிலைகள் உருவாகின்றன. தமிழ் சமூகத்துக்கு மத்தியில் உள்ள அடிப்படைவாதிகளால் அங்கு அசாதாரண சூழ் நிலைகள் உருவாகின்றன. அப்படித்தான் முஸ்லிம் சமூகத்துக்குள் இருக்கின்ற அடிப்படைவாதிகளால் அங்கு அசாதார சூழ்நிலைகள் உருவாகின்றன. ஒவ்வொரு சமூகத்தின் கருவறைக்குள் இருந்துதான் அந்த அடிப்படைவாதிகள் உருவாகின்றனர் என்பதைத்தான் நான் அன்று நாடாளுமன்றத்தில் சொன்னேன்.” என ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
0 Comments