2024 ஆம் ஆண்டிற்கான தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்று புதன்கிழமை (11) நள்ளிரவு முதல் பரீட்சை முடிவடையும் வரை தனியார் வகுப்புக்களை நடாத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மாதிரி வினாத்தாள்களை அச்சிடுவதற்கும், வெளியிடுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவித்துள்ளார்.
பரீட்சை வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களைத் தருவதாகவோ அல்லது அதற்குச் சமமான வினாக்களை வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளிப்படுத்தவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவற்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் பகிர்வதற்கும் முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக அவ்வறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை மீறும் எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது தரப்பினர் குறித்து அருகில் உள்ள பொலிஸ் நிலையம், பொலிஸ் தலைமையகம் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு அறிவிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை செப்டம்பர் 15 ஆம் திகதி நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments