''போர் நிறுத்தம் எட்டப்படாத பட்சத்தில் இன்னும் பலர் சடலங்களாகவே திரும்புவார்கள்’’ என ஹமாஸ் எச்சரித்திருக்கும் நிலையில், சனிக்கிழமை அன்று காஸாவில் சடலமாக மீட்கப்பட்ட 6 பணயக் கைதிகளை மீட்கத் தவறியதற்காக இஸ்ரேல் மக்களிடம் அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்.
அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸால் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டவர்களை பேச்சுவார்த்தை நடத்தி மீட்பதற்கு முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டி இஸ்ரேலில் போராட்டங்கள் இரண்டாம் நாளாக தொடரும் நிலையில், நெதன்யாகு மன்னிப்பு கோரியுள்ளார்
இந்த நிலையில் சர்வதேச சட்டத்தை மீறும் ஆபத்து இருப்பதாக கூறி, இஸ்ரேலுக்கு சில ஆயுதங்களின் விற்பனையை பிரிட்டன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. அடுத்தடுத்த நிகழ்வுகளால் இஸ்ரேல் அரசு மீது சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
இஸ்ரேல் துருப்புகள் காஸாவின் பிலடெல்பி பாதையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு. வலியுறுத்தினார்.
பிலடெல்பி பாதை எகிப்துடனான காஸாவின் எல்லையில் உள்ளது. உத்தி ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த நிலப்பகுதியான பிலடெல்பி பாதை, ஹமாஸ் உடனான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டமுடியாத அம்சங்களில் ஒன்றாக உள்ளது.
ஏறக்குறைய 11 மாதங்கள் ஆகியும் தங்கள் அன்புக்குரியவர்களை சொந்த நாட்டிற்கு மீட்டு வர தவறிய நெதன்யாகு மீது கோபத்தை வெளிப்படுத்த பணயக் கைதிகளின் குடும்பங்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர். இந்த போராட்டங்களில் திங்களன்று ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் கலந்து கொண்டனர்.
ஜெருசலேமில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு வெளியே நடந்த ஒரு ஆர்ப்பாட்டத்தில், போராட்டக்காரர்களை அப்புறப்படுத்த போலீசார் அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்து தள்ளி கடுமையாக நடந்து கொண்டனர் என்று தி டைம்ஸ் ஆஃப் இஸ்ரேல் செய்தி கூறுகிறது.
காவல்துறை அதிகாரி ஒருவர் டைம்ஸ் ஆப் இஸ்ரேல் நிருபரின் கழுத்தை பிடித்து நெரித்ததாகவும் அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நாடு முழுவதும் நடந்த ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் தெருக்களில் இறங்கி போராடினர்.
இதனைத் தொடர்ந்து புதிய போராட்டங்கள் ஆங்காங்கே வெடித்தன. சில ஆர்ப்பாட்டக்காரர்கள் டெல் அவிவில் ஒரு முக்கிய நெடுஞ்சாலையை முடக்கினர்.
பலர் இஸ்ரேலிய கொடிகளை அணிந்து கொண்டு மஞ்சள் நிற ரிப்பன்களை வைத்து கொண்டிருந்தனர். இவை மக்கள் பணயக் கைதிகளின் குடும்பங்களுடன் நிற்பதை பிரதிபலித்தன.
கடந்த ஆண்டு அக்டோபர் 7-ஆம் தேதி ஹமாஸால் கடத்தப்பட்ட பின்னர் 97 பணயக்கைதிகளின் நிலை குறித்து எந்த தகவலும் இல்லாமல் உள்ளது.
அச்சுறுத்தும் ஹமாஸ்
இஸ்ரேலின் ராணுவ அழுத்தம் தொடர்ந்தால் பணயக்கைதிகள் "சவப்பெட்டிகளில்" திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று திங்களன்று ஹமாஸ் கூறியுள்ளது. பணயக் கைதிகளை மீட்க இஸ்ரேலிய துருப்புகள் அணுகினால் அவர்களை கையாள பாதுகாவலர்களுக்கு "புதிய அறிவுறுத்தல்கள்" வழங்கப்பட்டுள்ளன எனத் தெரிவித்துள்ளது.
"பேச்சுவார்த்தைகளுக்கு பதிலாக, ராணுவ அழுத்தத்தின் மூலம் பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு வலியுறுத்துவது என்பது அவர்கள் தங்கள் குடும்பங்களுக்கு சடலமாக திருப்பி அனுப்பப்படுவதை ஊக்குவிப்பதாகும். அவர்கள் இறக்க வேண்டுமா அல்லது உயிருடன் இருக்க வேண்டுமா என்பதை அவர்களது குடும்பத்தினர் முடிவு செய்ய வேண்டும்," என்று ஹமாஸ் குழுவின் செய்தித் தொடர்பாளர் கூறினார். என்ன புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்பதை அவர் விவரிக்கவில்லை.
முன்னதாக திங்களன்று, இஸ்ரேலின் மிகப்பெரிய தொழிற்சங்கம், காஸா போர் நிறுத்தம் மற்றும் ஹமாஸுடன் பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை ஒப்புக்கொள்ள அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க அழைக்கப்பட்ட ஒரு பொது வேலை நிறுத்த போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இணைந்ததாகக் கூறியது.
இருந்த போதிலும் பல இடங்களில் இயல்பு நிலை நீடித்தது. டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையத்தில் சிறிய அளவில் தடங்கல் ஏற்பட்டது. ஏராளமான உணவகங்கள் மற்றும் ஹோட்டல் சேவைகள் வழக்கம்போல் இயங்கின.
தீவிர வலதுசாரியாக கருதப்படும் நிதி அமைச்சரான பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேலியர்கள் பலர் வேலைக்குச் சென்றுவிட்டதாகவும், அரசியல் தேவைகளுக்கு தாங்கள் இனி அடிமைகள் இல்லை என்பதை நிரூபித்ததாகவும் கூறினார்.
அமெரிக்காவின் நிலைப்பாடு என்ன?
போர் நிறுத்தம் குறித்த ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு விரைவில் இஸ்ரேலிய பிரதமருக்கு அனுப்பப்படும் என்று சில செய்திகள் கூறுகின்றன. இந்த நிலையில், போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை மீட்கும் ஒப்பந்தத்தை மேற்கொள்ள நெதன்யாகு போதுமான அளவு செயல்படவில்லை என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
மற்றொரு புறம் ஹமாஸ் அழிக்கப்படுவதற்கு முன் நிரந்தர போர் நிறுத்த உடன்படிக்கையை ஏற்றுக்கொண்டால், கூட்டணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக நெதன்யாகுவின் தீவிர வலதுசாரி கூட்டணி கட்சிகள் அச்சுறுத்தியுள்ளன.
எனவே, நெதன்யாகு தனது சொந்த அரசியல் நலனுக்கு முன்னுரிமை அளித்து, அமைதி ஒப்பந்தத்தைத் தடுப்பதாக பலர் குற்றம் சாட்டுகின்றனர். இதனை அவர் நிராகரித்தார்.
இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக, இறந்துவிட்டதாக கருதப்படும் 33 பேரின் உடல்கள் உட்பட, இன்னும் பிடியில் உள்ள 97 இஸ்ரேலிய பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்ற ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா, எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.
பட மூலாதாரம்,EPAபடக்குறிப்பு,இஸ்ரேலுக்கு சில ஆயுத விற்பனையை பிரிட்டன் நிறுத்தியதால் சர்வதேச அளவில் அழுத்தம் அதிகரித்துள்ளது.
பிரிட்டனின் புதிய நடவடிக்கை
பிரிட்டன் வெளியுறவு செயலாளர் டேவிட் லாமி திங்களன்று, இஸ்ரேலுக்கான 350 ஆயுத ஏற்றுமதி உரிமங்களில் 30 ஐ பிரிட்டன் தற்காலிகமாக நிறுத்தி உள்ளது என்று கூறினார். சர்வதேச சட்டத்தை மீற இந்த தளவாடங்கள் பயன்படுத்தப்படும் ஆபத்து இருப்பதாக அவர் கூறினார்.
அவற்றில், போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களுக்கான உதிரி பாகங்கள் அடங்கும். தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான இஸ்ரேலின் உரிமையை பிரிட்டன் தொடர்ந்து ஆதரித்து வருவதாகவும், இது முழு ஆயுதத் தடையல்ல என்றும் லாமி கூறினார்.
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோகவ் கேலன்ட் எக்ஸ் தளத்தில், இந்த நடவடிக்கையால் தான் மனமுடைந்து இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
உயிரிழந்த பணயக் கைதிகளின் இறுதிச் சடங்கு
இதற்கிடையில், கொல்லப்பட்ட பணயக்கைதிகள் சிலரின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன.
சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 31) இஸ்ரேலால் சடலமாக மீட்கப்பட்ட பணயக் கைதிகளில் ஒருவரான ஹெர்ஷ் கோல்ட்பர்க்-போலின் இறுதிச் சடங்கில் பேசிய அவரது தாயார், பல மாதங்களாக அவரைப் பற்றி நினைத்து பெரும் வேதனையில் இருப்பதாகக் கூறினார்.
ஜெருசலேமின் தெருக்களில் துக்கம் அனுசரிக்கப்பட்டது. இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக்கும் இறுதிச் சடங்கில் பங்கேற்றார்.
அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீதான முன் அறிவிப்பில்லாத தாக்குதலுக்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக் கைதிகளாக பிடிபட்டனர்.
இஸ்ரேலின் பதில் தாக்குதலில் காஸாவில் 40,000 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி...
BBC-Tamil
0 Comments