நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் முப்படைகளின் தளபதி என்ற வகையில், நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கைப் பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்கொள்வார் என முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தலில் வெற்றிபெற சதி செய்ய வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை எனவும் பாதுகாப்பு படையினரை தயார் நிலையில் வைத்துள்ளதாகவும், நாட்டில் அமைதியை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை ஜனாதிபதி மேற்கொள்வார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காலியில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்கள் துன்பப்பட்ட யுகத்துக்கு மீண்டும் 21ஆம் திகதி நாம் திரும்பிச் செல்ல முடியாது. அந்த துன்பத்தை மீண்டும் அனுபவிக்க நாங்கள் விரும்பவில்லை.
நாட்டை இன்னொரு மோதலை நோக்கி தள்ள வேண்டுமா? மக்கள் எதிர்கொண்ட இன்னல்களை நினைவுகூர்ந்து எதிர்வரும் 21ஆம் திகதி தீர்க்கமான தீர்மானத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.
இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு, மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயு பற்றாக்குறையால் குழந்தைகள் அவதிப்படும்போதும், மக்கள் வரிசையில் நின்று இறக்கும்போதும் இந்த நாட்டு மக்கள் தலைவர்களிடம் உதவி கோரினர்.
அந்த மக்களின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிவர்த்தி செய்ய எந்தத் தலைவரும் முன்வரவில்லை, ஏனெனில் அவர்களால் இந்த நாட்டைப் பொறுப்பேற்க முடியவில்லை. ஆனால், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அன்று மக்கள் அனுபவித்த துன்பங்களை புரிந்து கொண்டார்.
மக்களின் நலனுக்காக அச்சமின்றி உசிதமான முடிவுகளை எடுத்தார். அவைகள் அரசியல் ரீதியாக ஆபத்தான முடிவுகளாகும்.
நாங்கள் அரசியல் தற்கொலை செய்து கொள்கிறோம் என மக்களால் விமர்சிக்கப்பட்டோம் ஆனால், நாங்கள் அந்த முடிவுகளை எமது மக்களுக்காக எடுத்தோம். இரண்டரை வருடங்களுக்குள் மக்களுக்கு எரிபொருள் மற்றும் எரிவாயுவை வழங்கி நாட்டை ஸ்திரப்படுத்த முடிந்தது.
எமது மக்கள் அதை நினைவுகூருகிறார்கள். மேலும், அவர்கள் ஜனாதிபதித் தேர்தலில் தங்கள் நன்றியைச் செலுத்த விரும்புகிறார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
0 Comments