Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

பங்களாதேஷ் இந்தியாவை மிரட்டுகின்றதா?


தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்துவிட்டு பங்களாதேஷில் இருந்து வெளியேறிய ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா அடைக்கலம் கொடுத்துள்ளது.

அவரை இந்தியா திருப்பி அனுப்பி வைக்காத நிலையில் பங்களாதேஷ் நாட்டின் இடைக்கால அரசின் செயல்பாடு என்பது இந்தியாவை மிரட்டும் வகையில் உள்ளதாக கூறப்படுகிறது. சமீபத்தில் அந்த நாடு எடுத்த 3 முக்கிய விஷயங்கள் என்னென்ன? அது இந்தியாவை எந்த வகையில் பாதிக்கும்? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகிஸ்தானில் இருந்து பிரிந்து பங்களாதேஷ் தனி நாடாக 1971ல் உருவானது. இதற்காக உயிர் தியாகம் செய்த தியாகிகளின் வாரிசுகளுக்கு இருக்கும் இடஒதுக்கீட்டுக்கு எதிராக அங்கு பெரிய அளவில் மாணவர்கள் போராட்டத்தை தொடங்கினர். இதையடுத்து கடந்த மாதம் 5ம் திகதி ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்து உயிருக்கு பயந்து இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

பங்களாதேஷில் இடைக்கால அரசு அமைந்துள்ளது. நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு என்பது செயல்பட்டு வருகிறது. இந்த அரசியல் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்த 2 மாணவர்கள் ஆலோசகர்களாக இடம்பெற்றுள்ளனர். இத்தகையில் சூழலில் தான் ஷேக் ஹசீனாவை ரகசிய இடத்தில் தங்க வைத்து இந்திய மத்திய அரசு பாதுகாத்து வருகிறது. இதற்கிடையே தான் ஷேக் ஹசீனாவை திரும்ப அனுப்ப பங்களாதேஷில் இருந்து இந்தியாவுக்கு அழுத்தம் இருந்து வருகிறது. ஆனால் இந்தியா கண்டுக்கொள்ளவில்லை.

கடந்த 2009 முதல் ஷேக் ஹசீனா அந்நாட்டின் பிரதமராக செயல்பட்டு வந்த நிலையில் அவர் இந்தியாவுக்கு ஆதரவாக இருந்து வந்தார். இதனால் ஷேக் ஹசீனா வேறு நாட்டில் அடைக்கலம் செல்லும் வரை இந்தியா தொடர்ந்து பாதுகாப்பு வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தான் தற்போது பங்களாதேஷில் நடக்கும் இடைக்கால அரசு இந்தியாவுக்கு எதிரான செயல்பாட்டில் தீவிரம் காட்டி வருகிறதா? என்ற பெரிய சந்தேகம் எழுந்துள்ளது. ஏனென்றால் இடைக்கால அரசின் சமீபத்திய செயல்பாடு என்பது இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்டவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டும் வகையில் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் நடந்த 3 முக்கிய விஷயங்களை இங்கு பார்ப்போம்.

அதாவது இடைக்கால அரசின் தலைமை அட்வைசரான முகமது யூனுஷ் தற்போது ஹெஃபாசாத் இ இஸ்லாம் அமைப்பின் தலைவர் மாமுனுல் ஹக்கை சந்தித்துள்ளார். இந்த மாமுனுல் ஹக் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டவர். அதுமட்டுமின்றி பிரதமர் மோடி பங்களாதேஷ் சென்றபோது அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தவர். இவரை ஷேக் ஹசீனா சிறையில் அடைத்தார். தற்போது அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி முகமது யூனுசை தலைநகர் டாக்கவில் மாமுனுல் ஹக் தனது குழுவினருடன் சந்தித்து பேசியுள்ளார்.

சமீபத்தில் பங்களாதேஷின் இடைக்கால அரசு அந்நாட்டின் மிகப்பெரிய இஸ்லாமியக் கட்சியான ஜமாத்-இ-இஸ்லாமி மீதான தடையை நீக்கியது. இவர்கள் சிறுபான்மையினருக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்து வருபவர்கள். இதனால் எதிர்காலத்தில் இந்து உள்ளிட்ட சிறுபான்மையினர்களின் நிலை என்னவாகும் என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, இந்தியாவுக்கு அங்குள்ள சிறுபான்மையினரின் மீதான கவலையை அதிகரித்துள்ளது.

அதேபோல் சமீபத்தில் அன்சருல்லா பங்களா அணியின் தலைவர் ஜாஷிமுதீன் ரஹ்மானை இடைக்கால அரசு விடுவித்தது. இவர் யார் என்றால் அல்கொய்தா அமைப்புடன் நெருக்கமாக உறவை கொண்டவர். அன்சருல்லா பங்களா அணி என்பது அல்கொய்தாவின் ஒரு பிரிவாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இவரை ஷேக் ஹசீனா சிறையில் அடைத்த நிலையில் இடைக்கால அரசு விடுவித்துள்ளது. இதனால் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ட்விஸ்ட் பொதுவாக இந்தியாவுக்கு பாகிஸ்தானை போல் பங்களாதேஷும் முதலில் அச்சுறுத்தலாக இருந்தது. பங்களாதேஷில் இருந்து பயங்கரவாதிகள் இந்தியாவுக்குள் நுழைந்து வந்தனர். ஆனால் 2009 முதல் ஷேக் ஹசீனா நம் நாட்டுன் இணக்கமாக செயல்பட்டார். இதையடுத்து பயங்கரவாத அமைப்பு மற்றும் பயங்கரவாதிகளை அவர் கைது செய்து சிறையில் அடைத்தார். இது இந்தியாவுக்கு சாதகமாக அமைந்தது.

ஆனால் தற்போது ஷேக் ஹசீனா இந்தியாவில் உள்ள நிலையில் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட அமைப்புகள் மீதான தடையை நீக்குவதும், சிறையில் உள்ள அந்த நாடுகளின் தலைவர்களை விடுவிப்பதையும் முகமது யூனுஷ் தலைமையிலான இடைக்கால அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால் ஷேக் ஹசீனாவை விடுவிக்காத காரணத்தினால் இடைக்கால அரசு தனது நடவடிக்கைகள் மூலம் இந்தியாவை மிரட்ட தொடங்கி உள்ளதா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.

Post a Comment

0 Comments