இலங்கையில் சுற்றுலாதலங்களில் பாதுகாப்பு தொடர்ந்தும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இதற்காக காவல்துறையினர், விசேட அதிரடிப்படையினர், இராணுவ உத்தியோகத்தர்கள், விமானப்படையினர் மற்றும் கடற்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
அறுகம்பை, ஹிக்கடுவ, வெலிகம, மிரிஸ்ஸ, திக்வெல்ல உள்ளிட்ட சுற்றுலா தலங்களில் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை விசேட அதிரடிப்படையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதேவேளை, அறுகம்பையில் உள்ள சுற்றுலாத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தத் திட்டமிட்டதாகச் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மூவரிடமும் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலியர்களை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தூதரகத்திற்கு நம்பகத் தகுந்த தகவல் கிடைத்துள்ளதாக இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அறுகம்பை பகுதிக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு தங்களது நாட்டுப் பிரஜைகளை அறிவுறுத்தியிருந்தது.
இவ்வாறான பின்னணியில், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறும், முடிந்தால் பயணங்களை ஒத்திவைக்குமாறும் இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்களை அந்த நாட்டுத் தேசியப் பாதுகாப்புச் சபை அறிவுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் சுற்றுலாப் பயணிகள் தங்கும் அனைத்து இடங்களுக்கும் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இலங்கையிலுள்ள சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைய வேண்டிய அவசியமில்லை.
தற்போது பல நாடுகளிலிருந்து இலங்கைக்குச் சுற்றுலாப் பயணிகள் வருவதாக சுற்றுலாத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
0 Comments