Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



வயோதிபப் பெண் தெரிவித்த சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிட்ட உத்தியோகத்தர் பணிநீக்கம்...!



இன்றைய தேர்தல் வாக்குச்சாவடியில் வாக்களிக்கச் சென்ற வயோதிபப் பெண், அங்கு கடமையில் ஈடுபட்டிருந்த உத்தியோகத்தரிடம் சின்னமொன்றை கூறி, அதில் புள்ளடியிட்டு உதவி செய்யுமாறு கேட்க, அப்பெண் கூறிய சின்னத்துக்கு பதிலாக வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிட்டுக் கொடுத்த உத்தியோகத்தர் உடனடியாக கடமையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு காத்தான்குடி ஹிஸ்புலா பாலர் பாடசாலை வாக்குச்சாவடியில் கடமையாற்றிய உத்தியோகத்தரே பணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை (14) பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவின்போது வயோதிபப் பெண்ணுக்கு உதவி செய்ய முன்வந்த உத்தியோத்தர், தவறான சின்னத்தில் புள்ளடியிட்டுக் கொடுத்த காரணத்தால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் உதவி ஆணையாளர் எம்.பி.எம். சுபயான் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

இந்த வாக்குச்சாவடியில் வயோதிபப் பெண்ணொருவர் வாக்களிப்பதற்கு உதவி கோர, அவருக்கு உதவி செய்யுமாறு அங்கு கடமையாற்றிவரும் உத்தியோகத்தர் ஒருவரை வாக்குசாவடிக்கு பொறுப்பான தேர்தல் பொறுப்பதிகாரி பணித்துள்ளார்.

பின்னர், அந்தப் பெண் ஒரு சின்னத்தை தெரிவித்து, அதற்கு புள்ளடியிடுமாறு உத்தியோகத்தரிடம் தெரிவித்தார்.

அதை அடுத்து, அந்த உத்தியோகத்தர் பெண் கூறாத வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிட்டு வாக்குச்சீட்டை மடித்து பெண்ணிடம் வழங்கியுள்ளார்.

அந்த வாக்குச்சீட்டை அவர்  விரித்துப் பார்த்து, தான் தெரிவித்த சின்னத்துக்கு புள்ளடியிட்டுள்ளாரா என பார்த்தபோது வேறொரு சின்னத்துக்கு புள்ளடியிடப்பட்டுள்ளமை தெரியவர, அங்கு பெருங்குழப்பம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, அந்த வாக்குச்சாவடிக்கு மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர் சென்று உடனடியாக அந்த உத்தியோகத்தரை கடமையில் இருந்து நீக்கி, அவரை தேர்தல் திணைக்களத்துக்கு விசாரணைக்காக அழைத்துச் சென்றதுடன், மீண்டும் ஏற்பாடு செய்யப்பட்டு உரிய முறையில் அப்பெண்ணின் வாக்கு பதிவு செய்யப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தேர்தல் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments