நாட்டில் கட்சிகளுக்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியலுக்கான பெயர்கள் அறிவிக்கப்பட்டு வரும் நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கிடைத்திருக்கும் ஒரேயொரு தேசியப்பட்டியலுக்கான பெயர் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், இப்படி தாமதமாகுவது புதிய விடயமுமல்லை.2015ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸுக்கு ஐக்கிய தேசியக் கட்சியிடமிருந்து கிடைத்த தேசியப்பட்டியலுக்கு மு.கா தலைவர் ரஊப் ஹக்கீம், தனது மூத்த சகோதரர் டொக்டர் ஏ.ஆர்.ஏ. ஹபீஸை நியமித்து அழகு பார்த்தார். பின்னர் தனது நண்பர் எம்.எச்.எம். சல்மானுக்கு அதனை வழங்கினார். அதன் பிறகுதான் அட்டாளைச்சேனை மக்களின் அழுத்தம் தாங்க முடியாத ஒரு நிலையில், அந்த ஊரைச் சேந்த ஏ.எல்.எம். நசீருக்கு 2018ஆம் ஆண்டு அந்தத் தேசியப்பட்டியலை ரஊப் ஹக்கீம் வழங்கினார்.
இம்முறை நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் - முஸ்லிம் காங்கிரஸுக்கு நேரடியாகவே ஒரு தேசியப்பட்டியல் கிடைத்திருக்கிறது. அதனைப் பெற்றுக் கொள்வதற்காக அந்தக் கட்சியைச் சேர்ந்த பலரும் வட்டமடிக்கத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைவரமானது, தேசியப்பட்டியலை நியாயமாக வழங்க வேண்டிய நபர்களுக்கு வழங்காமல் இழுத்தடிப்பதற்கு சாதகமானதாகவே ஹக்கீமுக்கு அமையும்.
“முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியலை அந்தக் கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பர் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். மு.காவின் தேசியப்பட்டியல் வேட்பாளர் பட்டியலிலும் நிசாம் காரியப்பரின் பெயர் உள்ளது. ஆனால், நிசாம் காரியப்பருக்கு கொடுக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி என்பது, விழலுக்கு இறைத்த நீருக்குச் சமமானதாகவே அமையும். அந்த மனிதர் - பொதுமக்களுடன் நெருக்கமான உறவில்லாதவர். மேட்டுக்குடி மனப்பான்மையுடன் இன்னும் இருப்பவர். அதனால், மக்கள் பிரதிநிதித்துவமொன்றை நிசாம் காரியப்பருக்கு வழங்குவது - மு.காவுக்குக் கிடைத்த தேசியப்பட்டியலை வீணாக்குவதற்கு ஒப்பானதாகும்.”இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதிக்கு மு.காங்கிரஸ் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார். அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகவும் பொத்துவில் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்திருக்கின்றார். கல்முனை தொகுதிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
இம்முறை பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில் தொகுதிக்கு மு.காங்கிரஸ் சார்பில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்துள்ளார். அ.இ.ம.காங்கிரஸ் சார்பாகவும் பொத்துவில் தொகுதிக்கு ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கிடைத்திருக்கின்றார். கல்முனை தொகுதிக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தேசியப்பட்டியல் மூலம் ஒரு நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது.
எனவே, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தை நீண்ட காலமாக இழந்து வரும் - சம்மாந்துறைத் தொகுதிக்கே முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் ஊடான நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை வழங்குவது நியாயமாக இருக்கும்.
ஆனால், இம்முறைத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். தௌபீக் தோல்வியுற்றிருக்கிறார். கடந்த காலங்களில் மு.காவுக்குக் கிடைத்த தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை, தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கியிருந்தார். அப்படி வழங்கியமை அநீதியானது. நியாயப்படி வேறு நபர்களுக்கு வழங்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையே - தௌபீக்குக்கு ஹக்கீம் வழங்கினார். ஹக்கீமுடைய மனைவியின் உறவுக்காரப் பெண்ணை தௌபீக் திருமணம் செய்திருப்பதால், இவ்வாறு ஹக்கீம் நடந்து கொண்டதாக, மு.காங்கிரஸுக்குள் ஒரு பேச்சு உள்ளது. எனவே, இம்முறையும் மு.காவுக்கு கிடைத்திருக்கும் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தௌபீக்குக்கு ஹக்கீம் கொடுத்து விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
@மரைக்கார்’
0 Comments