Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



ஜனாதிபதியுடன் பேச்சு நடத்த தமிழரசுக் கட்சிக்கு வாய்ப்பு...!



மாகாண சபை முறைமை தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடுவதற்கு இந்த வாரத்தில் வாய்ப்பளிக்கப்படுமென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

13 ஆவது திருத்தச் சட்டத்தின் கீழான, மாகாண சபை முறைமை தொடர்பில் நேற்று சபையில் கேள்வியொன்றை எழுப்பிய இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு, பதிலளிக்கும் வகையிலேயே சபை முதல்வர் இவ்வாறு தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நேற்று சபாநாயகர் அசோக்க சபுமல் ரன்வல தலைமையில் காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

அதன் போது, சாணக்கியன் எம்.பி சபையில் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி, தமது கேள்வியை முன் வைத்தார். மாகாண சபை முறையை இல்லாதொழிக்கப் போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா வெளியிட்டுள்ள கருத்து தொடர்பில் குறிப்பிட்ட அவர், அரசாங்கம் அது தொடர்பில் தமது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டுமென்றும் சபையில் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதிலளித்த சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்னாயக்க;

மாகாண சபை முறைமை தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ள முடியும்.

சாணக்கியன் எம். பி மீது எமக்கு மரியாதை உள்ளது. அந்த வகையில் அவர் எவராவது குறிப்பிடுவதை கேட்டுக் கொண்டு, வீண் சந்தேகங்களை கிளப்பக்கூடாது.

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவோடு அல்ல, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வாய்ப்பு வழங்கப்படும்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் எம். பியும் அந்தக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவருமான சிவஞானம் ஸ்ரீதரன் ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தையொன்றுக்கு அனுமதி கோரியுள்ளார். அதன்படி இந்த வாரத்தில் அதற்கான வாய்ப்பு பெற்றுக் கொடுக்கப்படும்.

ஜனாதிபதியை சந்தித்து இவ்விடயம் தொடர்பில் சாணக்கியன் எம். பி. அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அறிந்து கொள்வதற்கு இந்த வாரத்திலேயே அனுமதி பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

Post a Comment

0 Comments