
பொதுமக்களுக்கு பொலிஸாரால் வழங்கப்படும் சேவைக்கான கட்டணத்தை அதிகரிப்பதற்கு பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவித்துள்ளார்.
இதுதொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபரால் சகல பொலிஸ் நிலையங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சேவை கட்டணங்களை வசூலிப்பது தொடர்பில் தற்போது நடைமுறையிலுள்ள 2023.06.02 திகதியிடப்பட்ட பொலிஸ் மா அதிபர் சுற்றறிக்கை எண் 2749/2023 (நிதி சுற்றறிக்கை 04/2023) இரத்துச் செய்யப்படுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அந்த சுற்றறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இதுவரை ஒலிபெருக்கிகளுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் நாளொன்றுக்காக 300 ரூபா அறவிடப்பட்ட நிலையில் இந்த சுற்றறிக்கையினூடாக இக்கட்டணம் 2,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டள்ளது.
பொலிஸ் மோப்பநாய்களுக்காக ஒன்றரை மணிநேரத்துக்கு பயணிக்கக்கூடிய அதிகபட்ச தூரத்தை கால்நடைமருத்துவரின் பரிந்துரைக்கமைய தீர்மானிக்கவும் பாடசாலை கண்காட்சிகளுக்காக பொலிஸ் உத்தியோகபூரவ மோப்பநாய்களை பெற்றுகொடுப்பதற்கு பணம் அறவிடல் அல்லது அறவிடாமை தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் அனுமதிக்குட்பட்டு இதுவரை வசூலிக்கப்பட்ட 3,000 ரூபா இதன்பின்னர் 20,000ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று குதிரையொன்றுக்கு ஒன்றரை மணிநேரத்துக்கு 6,000ரூபா வசூலிக்கப்பட்ட நிலையில் சுற்றறிக்கையின் பின்னர் அக்கட்டணம் 30,000ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு வாகனத்தை இழுத்துச் செல்வதற்கான கட்டணம் 600 ரூபாவிலிருந்து 5,000ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே கைரேகை அறிக்கைக்கான கட்டணம் 150 ரூபாவிலிருந்து 500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுழியோடி உபகரணங்களுகாக அறவிடப்பட்ட கட்டணம் 2,400 ரூபாவிலிருந்து 4,000ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உயிர்க்காக்கும் உபகரணங்களுக்காக அறவிடப்பட்ட கட்டணம் 1,200 ரூபாவிலிருந்து 5,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments