
அனைத்து துறைகளிலும் நவீனங்களை புகுத்தி வரும் துபாயானது போக்குவரத்து துறையிலும் பல்வேறு புதுமைகளை தற்பொழுது புகுத்தி வருகின்றது.
பொதுவாக துபாயில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மற்றும் துபாய்க்கு வரும் சுற்றுலாவாசிகள் என அனைவரையும் கவரும் ஒரு விஷயமாக துபாய் டிராம் இருக்கின்றது. இதற்கென தனி டிராக் (track) சாலை ஓரத்தில் மட்டுமல்லாமல் வாகனங்கள் செல்லும் சாலையின் குறுக்கேயும் இருப்பதால் இந்த டிராம் செல்லும் போது அனைவரின் கவனத்தையும் ஈர்க்கின்றது. இது ஒருபுறமிருக்க துபாய் டிராமில் தற்பொழுது புதியதொரு மாற்றத்தை துபாய் அரசு அறிமுகப்படுத்தவிருக்கின்றது.
நவம்பர் 2024 இல் முதன்முதலில் துபாயின் பட்டத்து இளவரசரும் ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைப் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரும், துபாய் நிர்வாகக் குழுவின் தலைவருமான மாண்புமிகு ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், நகரின் எட்டு இடங்களில் டிராக் இல்லாமல் செல்லக்கூடிய ‘டிராக்லெஸ் டிராம்’ (trackless tram) திட்டத்தை செயல்படுத்துவதற்கான ஆய்வை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், துபாயில் நடந்த Gitex Global 2025 இன் போது பேசிய சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) மூத்த அதிகாரி ஒருவர், இந்த அமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான விரிவான ஆய்வு 2026 நடுப்பகுதியில் அல்லது ஆண்டின் முதல் காலாண்டில் முடிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஓட்டுநர் இல்லாத, சுற்றுச்சூழலுக்கு உகந்த எலெக்ட்ரிக் டிராம்கள் துபாய் மெட்ரோவுடன் தடையின்றி இணைக்கப்படும் என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் 25 சதவீத போக்குவரத்தை ஸ்மார்ட் மற்றும் தன்னாட்சி பெற்றதாக மாற்றுவதற்கான எமிரேட்டின் பரந்த தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாகும் என்றும் RTAவின் ரயில் நிறுவனத்தின் ரயில் பராமரிப்பு இயக்குநர் தாவூத் அல்ரைஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியான விபரங்களின் படி, ஆப்டிகல் சென்சார்கள், ஜிபிஎஸ் மற்றும் லிடார் உள்ளிட்ட AI-இயக்கப்படும் வழிசெலுத்தலை பயன்படுத்தி விர்ச்சுவல் டிராகில் இயங்கும் இந்த டிராம் பாரம்பரிய டிராம்களுடன் ஒப்பிடும்போது குறைந்த செலவு மற்றும் வேகமான கட்டுமானத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேலும், ஒவ்வொரு டிராமிலும் 300 பயணிகள் செல்லக்கூடிய மூன்று கேரேஜ்கள் இருக்கும் என்றும், அதிகபட்சம் மணிக்கு 70 கிமீ, மற்றும் இயக்க வேகம் 25 முதல் 60 கிமீ / மணி வரை வேகத்தில் செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது. அத்துடன் ஒரு முறை சார்ஜ் செய்தால் 100 கிமீ வரை இந்த டிராமால் பயணிக்க முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
துபாய் டிராமின் 10வது ஆண்டு விழாவின் போது அறிவிக்கப்பட்ட இந்த திட்டம், ஆரம்பத்தில் நகரம் முழுவதும் எட்டு முக்கிய இடங்களை உள்ளடக்கும் என்றும், மேலும் பல இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு டிராமும் துபாயின் பேருந்து மட்டுமே செல்லும் வழித்தடங்களைப் போலவே பிரத்யேக பாதைகளில் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இது வழக்கமான போக்குவரத்துடன் சீரான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்கிறது.
இந்த முயற்சி துபாயின் ஸ்மார்ட் மொபிலிட்டி இலக்குகளுடன் ஒத்துப்போகிறது, நெரிசல் மற்றும் உமிழ்வைக் குறைக்கும் அதே வேளையில் இணைப்பை மேம்படுத்துகிறது என்று அல்ரைஸ் குறிப்பிட்டுள்ளார். “இந்த திட்டம் தடையற்ற, நிலையான பொது போக்குவரத்து அமைப்புக்கான நகரத்தின் வளர்ந்து வரும் தேவையை பூர்த்தி செய்யும் பாதையில் உள்ளது,” என்று அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.a
0 Comments