Trending

6/recent/ticker-posts

Live Radio

ரணில் Vs அனுரகுமார: செலவின ஒப்பீடு - வெளிவந்த புள்ளி விபரங்கள்...!



முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தனது ஆலோசகர்களுக்கு வேதனம் உள்ளிட்ட செலவுகள் குறித்து தகவல்கள் நாடாளுமன்றத்தில் வெளிக்கொணரப்பட்டுள்ளது.

அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவினால் இந்த விடயம் நேற்று வெளிக்கொணரப்பட்டது.

அதன்படி, முன்னாள் ஜனாதிபதிவின் ஆலோசகராக செயற்பட்ட அகிலவிராஜ் காரியசத்துக்கு 2022 முதல் 2024 செப்டம்பர் வரை வேதனமாக 25 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாய், எரிபொருள் கொடுப்பனவு 13 இலட்சத்து 91 ஆயிரம் ரூபாய், ஏனைய கொடுப்பனவாக 51 ஆயிரம் ரூபாய் என மொத்தமாக 40 இலட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், ஆசு மாரசிங்கவுக்கு 34 இலட்சத்து 84 ஆயிரம் ரூபாய், உத்திக பிரேமரத்னவுக்கு 4 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய், ரோசி சேனாநாயக்கவுக்கு 7 இலட்சத்து ஆயிரம் ரூபாய் மற்றும் சாகல ரத்நாயக்கவுக்கு 73 இலட்சத்து 9 ஆயிரத்து 155 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

அதேபோன்று, வடிவேல் சுரேஸ், ஹரின் பெர்ணான்டோ, மனுஷ நாணயக்கார, ருவான் விஜேவர்தன, தினேஷ் வீரக்கொடி ஆயோருக்கும் அதிக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முதல் 9 மாதங்களின் முழு செலவீனமாக 857 மில்லியன் ரூபாயாக இருப்பதுடன், ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் முதல் 9 மாத முழு செலவீனம் 493 மில்லியன் ரூபாயினால் குறைந்து 364 மில்லியன் ரூபாயாக மட்டுப்படுப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளிப்படுத்தினார்.

மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணங்களின் செலவீனமாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 11.9 மில்லியன் ரூபாயை செலவிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முதல் ஒன்பது மாதங்களில் 3.6 மில்லியன் ரூபாயினை மாத்திரமே செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அத்துடன், எரிபொருள் கொடுப்பனவாக ரணில் விக்ரமசிங்க 263 மில்லியன் ரூபாயையும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 140 மில்லியன் ரூபாயையும் செலவிட்டுள்ளனர்.

அதற்கமைய, 2024 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் முன்னாள் ஜனாதிபதி 66.9 மில்லியன் செலவிட்டுள்ள நிலையில் அதனை தற்போதைய ஜனாதிபதி 41.2 மில்லியன் ரூபாயான குறைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 2022 ஆம் ஆண்டு நான்கு வெளிநாட்டு பயணங்களுக்காக 129.31 மில்லியன் ரூபாயும் 2023 ஆம் ஆண்டு 16 பயணங்களுக்காக 577.9 மில்லியன் ரூபாயும் 2024 ஆம் ஆண்டு 5 வெளிநாட்டு பயணங்களுக்காக 300 மில்லியன் ரூபாயுமாக மொத்தமாக ஒரு பில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

எனினும், தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க 2024 டிசம்பர் முதல் 2025 செப்டெம்பர் மாதம் வரை 8 வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டுள்ளதுடன், அதற்காக 14.9 மில்லியன் ரூபாய் மாத்திரமே செலவிட்டுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்.

Post a Comment

0 Comments