Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கையில் உணவுப் பாதுகாப்பிற்கு கடும் அச்சுறுத்தல்..!

 



இலங்கையைத் தாக்கிய அண்மைய கடும் சூறாவளி மற்றும் வெள்ளப் பெருக்கு காரணமாக நாட்டின் மொத்த விவசாய நிலங்களில் 7.6 சதவீதமான (1,75,000 ஹெக்டேயர்) நிலப்பரப்பு முற்றாகச் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இது நாட்டின் அறுவடை மற்றும் உணவு உற்பத்தி மட்டத்தில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், உள்ளூர் உணவுப் பொருட்களின் விலையேற்றத்திற்கும் வழிவகுத்துள்ளது. அனர்த்தத்தினால் நெற்பயிர்களே மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. 
சுமார் 1.40 இலட்சம் முதல் 1.50 இலட்சம் ஹெக்டேயர் நெல் வயல்கள் அழிந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
 
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகபட்சமாக 36,188 ஹெக்டேயர், திருகோணமலை மாவட்டத்தில் 22,155 ஹெக்டேயர், அனுராதபுரம் மாவட்டத்தில் 15,237 ஹெக்டேயர், மன்னார் மற்றும் குருநாகல் தலா 10,000 ஹெக்டேயருக்கும் அதிகமான நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
சுமார் 7,000 முதல் 8,000 ஹெக்டேயர் மரக்கறிச் செய்கை நிலங்கள் அழிந்துள்ளன. 
 
இதில் நுவரெலியா (1,046 ஹெக்டேயர்) மற்றும் பதுளை (930 ஹெக்டேயர்) ஆகிய மாவட்டங்கள் பெரும் பாதிப்பைச் சந்தித்துள்ளன. 


மேலும் அனுராதபுரம் (671 ஹெக்டேயர்), குருநாகல் (508 ஹெக்டேயர்), திருகோணமலை (498 ஹெக்டேயர்), மட்டக்களப்பு (454 ஹெக்டேயர்) மற்றும் புத்தளம் (430 ஹெக்டேயர்) ஆகிய மாவட்டங்களிலும் கணிசமான பயிர் இழப்புகள் பதிவாகியுள்ளன. 
 
சோளம், மிளகாய், உழுந்து, பயறு போன்ற ஏனைய பயிர்கள் பயிரிடப்பட்ட சுமார் 18,000 முதல் 20,000 ஹெக்டேர் நிலப்பரப்பு நாடளாவிய ரீதியில் சேதமடைந்துள்ளது. 
 
இந்தப் பிரிவில் அதிக பாதிப்பைச் சந்தித்த மாவட்டமாகப் அனுராதபுரம் பதிவாகியுள்ளது. 
 
இங்கு சுமார் 3,478 ஹெக்டேயர் நிலப்பரப்பு அழிந்துள்ளது. 
 
அடுத்ததாக வவுனியா மாவட்டத்தில் 2,747 ஹெக்டேயர் நிலப்பரப்பு பாதிக்கப்பட்டுள்ளது. 
 
திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் குருநாகல் ஆகிய மாவட்டங்களிலும் தலா பல நூறு ஹெக்டேயர் பயிர்ச் செய்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. 
 
செயற்கைக்கோள் ஊடாகப் பெறப்பட்ட தகவல்களின்படி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களின் 13 முதல் 16 சதவீதமான நிலப்பரப்பு வெள்ள நீரில் மூழ்கியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தின் தகவல்களுக்கு அமைய, ஏற்கனவே கிராமப்புற குடும்பங்களில் 38 சதவீதமானோர் கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையில், இந்த அனர்த்தம் அதனை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. 
 
பெரும் போகத்திற்காகப் பாரிய அளவில் கடன் பெற்று விவசாயம் செய்த விவசாயிகள், தற்போது அறுவடை அழிந்துள்ளதால் கடனை மீளச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். 
 
பாதிக்கப்பட்ட நிலங்களில் உடனடியாக மீள்-விவசாய நடவடிக்கைகளை ஆரம்பிக்காவிட்டால், இலங்கையின் உணவுப் பாதுகாப்பு பாரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என விவசாயத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

Post a Comment

0 Comments