Trending

6/recent/ticker-posts

Live Radio

அரச மருந்தகக் கூட்டுத்தாபனத்தினால் அரசாங்கத்திற்கு 1.118 பில்லியன் ரூபா வருமானம்...!!



அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் (SPC), 2025ஆம் ஆண்டில் வருமான வரி மற்றும் திறைசேரி வரிகள் மூலம் அரசாங்கத்திற்கு 1.118 பில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது 2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 173 சதவீத பாரிய வளர்ச்சியாகும். இலங்கை அரச மருந்தகக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ள விபரங்களின்படி,சொந்த வருமான மார்க்கங்கள் மூலம் கிடைக்கும் வருவாய் 26 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

அத்தோடு, நாடு தழுவிய ஓசுசல மருந்தக வலையமைப்பின் வருமானம் 9 சதவீதத்தால் உயர்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அரச மருந்தக கூட்டுத்தாபன வரலாற்றில் முதல்முறையாக, சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் பிரிவிற்கான (DHS) நிதி ஒதுக்கீடுகள் அனைத்தையும் பயன்படுத்தி, மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான 'இன்டெண்ட்' (Indent) கட்டளைகளை முழுமையாக வழங்கியுள்ளது.

கிரிபத்கொட, நாரஹேன்பிட்டிய, கேகாலை, கல்முனை மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் ஐந்து புதிய ஓசுசல கிளைகள் திறக்கப்பட்டமை வருமான அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதுடன், வினைத்திறனான நிர்வாகத்தினால் நஷ்டத்தில் இயங்கிய பல கிளைகள் மீண்டும் இலாபமீட்டும் நிலைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு,மருந்துகளின் தரத்தை உறுதிப்படுத்த ISO 17025 ஆய்வக அங்கீகாரச் செயல்முறையை SPC ஆரம்பித்துள்ளது.

சந்தைக்கு விடப்படும் அனைத்து மருந்துகளும் நான்கு கட்டக் கடுமையான தரப்பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவதாக அமைச்சு உறுதி அளித்துள்ளது.

மேலும், முறையான மருந்துப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த நாடு முழுவதும் சுகாதார முகாம்கள் மற்றும் பொது விழிப்புணர்வுத் திட்டங்களையும் கூட்டுத்தாபனம் முன்னெடுத்து வருகின்றது.

Post a Comment

0 Comments