
அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள் தற்போதைக்கு முடிவுக்கு வந்துள்ளதாக ஈரான் அரசாங்கம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தெரிவித்துள்ளது.
இதனை ரொய்ட்டர் செய்தி நிறுவனம் செய்தியாக வெளியிட்டுள்ளது.
வொஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையே ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பாகிஸ்தானில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த செய்தி வெளியாகியுள்ளது.
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தை, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக நடைபெற்ற முதல் நேரடி அமெரிக்க-ஈரானிய சந்திப்பாக கருதப்படுகிறது.
அத்துடன், 1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு நடைபெற்ற மிக உயர்ந்த மட்டத்திலான கலந்துரையாடல்களும் ஆகும்.
இதன் முடிவு, நிலையற்ற இரண்டு வார கால போர் நிறுத்தத்தின் தலைவிதியையும், போர் தொடங்கியதிலிருந்து ஈரான் தடுத்துள்ள, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் சுமார் 20வீதத்துக்கு ஒரு முக்கியத் தடையாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதையும் தீர்மானிக்கக்கூடும் என்று ரொய்ட்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
இந்தநிலையில், 14 மணி நேர பேச்சுக்கள் முடிவுக்கு வந்ததாகவும், இரு தரப்பு தொழில்நுட்ப வல்லுநர்களும் ஆவணங்களைப் பரிமாறிக்கொள்வார்கள் என்றும் ஈரான் அரசாங்கம், தமது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது.
சில வேறுபாடுகள் எஞ்சியிருந்தாலும் பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அந்தப் பதிவில் மேலும் கூறப்பட்டுள்ளது.
ஆனால் அவை எப்போது மீண்டும் தொடங்கும் என்று அது குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், பேச்சுவார்த்தைகள் இன்று ஞாயிற்றுக்கிழமையும் தொடரும் என்று ஈரானிய அரசு தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருந்தபோதும், பேச்சுவார்த்தைகள் முடிவடைந்துவிட்டனவா, மேலும் ஏதேனும் வேறுபாடுகள் எஞ்சியுள்ளனவா என்பது குறித்து அமெரிக்க ட்ரம்ப் நிர்வாகம் இன்னும் கருத்து வெளியிடவில்லை.
இதற்கிடையில் மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மற்றும் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, பேச்சுவார்த்தையில் பங்கேற்ற ஈரானிய தூதுக்குழுவினர் கறுப்பு உடை அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளுக்காக, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கும் பாகிஸ்தானிய நகரமான இஸ்லாமாபாத் முடக்கப்பட்டதுடன், ஆயிரக்கணக்கான துணை இராணுவப் படையினரும் தெருக்களில் நிறுத்தப்பட்டனர்.



0 Comments