
பௌதிக ரீதியாகவும் ஆன்மீக ரீதியாகவும் புதுப்பொலிவு பெறுவதை அடையாளப்படுத்தும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு, இந்நாட்டு மக்களின் பிரதான கலாசார விழாவாகும். பாரம்பரிய வழக்கங்களைப் பாதுகாத்து, மத வழிபாடுகளுக்கு முன்னுரிமை அளித்து, ஒரே சுப நேரத்தில் அனைவரும் இணைந்து செயற்படுவது இப்புத்தாண்டின் சிறப்பம்சமாகும். இத்தகைய கலாசாரப் பகிர்வு, உலகிற்கு முன்னால் எமது நாட்டின் தனித்துவத்தையும், எமது சமூகங்களுக்கு இடையே நிலவும் சமூக-கலாசார பிணைப்பையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகின்றது.

நாட்டின் எதிர்கால அபிவிருத்திப் பாதையை, இந்த பெறுமதிமிக்க கலாசாரம் மற்றும் சிறந்த வரலாற்று மரபுரிமையுடன் மட்டுமே தெரிவு செய்ய முடியும் என நாம் உறுதியாக நம்புகிறோம். அதற்கமைய, எமது அனைத்து எதிர்கால அபிவிருத்தித் திட்டங்களும் அந்த பெறுமதியான மரபுரிமை மற்றும் கலாசாரத்தின் மீதே பலமாக அமையப்பெற்றுள்ளன என்பதை இங்கு நினைவுபடுத்த வேண்டும்.
அதேபோல், சூரியனின் பெயர்ச்சியுடன் தொடர்புடைய அனைத்து சம்பிரதாயங்களின் பொதுவான எதிர்பார்ப்பும், ஒற்றுமையை மதிக்கும் மற்றும் இயற்கையின் இருப்புக்கு மதிப்பளிக்கும் ஒரு மனிதாபிமானமுள்ள புதிய மனிதனை உருவாக்குவதாகும். இப்புத்தாண்டு சடங்குகளிலிருந்து வெளிப்படும் அந்த ஒற்றுமையின் பண்புகளும் விழுமியங்களும் அந்த சில நாட்களில் மாத்திரமன்றி, வருடம் முழுவதும் எமது நடத்தையில் பிரதிபலிக்க வேண்டும் என்று நான் கருதுகிறேன்.
கடந்த வருடத்தில் நாம் எதிர்கொண்ட அண்மைய காலத்தின் மிகப்பெரிய இயற்கை அனர்த்த சவால்களுக்கு மத்தியிலும் நாம் உலகுக்குக் காட்டிய மீண்டெழும் திறன் மற்றும் மத்திய கிழக்கு யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் திட்டமிட்ட ரீதியில், சிறந்த முகாமைத்துவத்துடன் செயற்பட்டு அந்த சவால்களை வெற்றிகொள்வதற்குத் தேவையான திட்டங்களை அரசாங்கம் தற்போது நடைமுறைப்படுத்தியுள்ளது.
ஒரு நாடாக ஒன்றிணைந்து இந்தச் சவால்களை வெற்றிகொள்ளும் போது, சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் வெளிப்படும் ஒற்றுமை மற்றும் பகிர்ந்துகொள்ளல் போன்ற பண்புகளால் எமது வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக் கொள்ள அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.
ஈட்டிய வெற்றிகளை மேலும் வலுப்படுத்துவதுடன், எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில் தளராது பயணித்து, ‘செல்வச் செழிப்பான நாடு – அழகான வாழ்க்கை’ எனும் இலக்கை அனைவருக்கும் உரித்தாக்குவதற்கு சகோதரத்துவத்துடன் கைகோர்க்குமாறு உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்து, பிறந்துள்ள சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சமாதானமும் மகிழ்ச்சியும் நிறைந்த சுப புத்தாண்டாக அமைய எனது இதயபூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அநுர குமார திசாநாயக்க
ஜனாதிபதி
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
14 ஏப்ரல் 2026



0 Comments