
சுகாதாரத் துறையின் அளவு மற்றும் தர ரீதியான சேவைகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், அடுத்த மூன்று ஆண்டுகளில் தாதியர் சேவைக்காக 13,600 பேர் பல கட்டங்களின் கீழ் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையின் அவசர விபத்து மற்றும் அவசர சிகிச்சைப்பிரிவு, மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆய்வகம் ஆகியவற்றை நேற்று (14) பிரதான அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்தபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்கள் வருமாறு:
ஒட்டுமொத்த சுகாதார சேவையும் பல்வேறு சவால்கள் மற்றும் கஷ்டங்களுக்கு மத்தியில் முன்னெடுத்துச் செல்லப்பட்ட போதிலும், அந்த நிலைமைகளைக் குறைப்பதற்காகத் தேவையான ஊழியர்களை இணைத்துக்கொள்வதற்கும் வசதிகளை வழங்குவதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கமைய, தாதியர் சேவைக்காக இணைத்துக் கொள்ளப்படவுள்ள மொத்த எண்ணிக்கையில் 50 சதவீதமானோர் இந்த வருடத்திற்குள்ளேயே இணைத்துக் கொள்ளப்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள தாதியர் பல்கலைக்கழகம் (Nursing University) ஆரம்பிக்கப்படுவதன் மூலம், தாதியர்களுக்கான பயிற்சி வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்த முடியும் என அமைச்சர் தெரிவித்தார். தற்போது செவிலியர் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக மட்டங்களில் சுகாதாரத் துறைக்குத் தேவையான தாதியர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர்.
இதற்கமைய, இந்த வருடத்திற்குள் தாதியர் கல்லூரிகளில் பயிற்சிக்காக 3,000 மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இந்த மாத இறுதிக்குள் இதற்கான நேர்முகப்பரீட்சைகள் மற்றும் இணைத்துக்கொள்ளல் நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு, பயிற்சிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.



0 Comments