Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈரான் மீண்டும் ஹோர்முஸை மூடியதால் எண்ணெய் விலை அதிகரிப்பு ; ட்ரம்ப் மீண்டும் தாக்குதல் குறித்து அச்சுறுத்தல்...!!



ஹோர்முஸ் நீரிணை ஊடான கப்பல் போக்குவரத்து மந்த நிலையில் இருப்பதாலும், தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் சந்திப்பு சற்று சுமுகமற்ற முறையில் தொடங்கியதாலும், திங்கட்கிழமை (22) மசகு எண்ணெய் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரெண்ட் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றுக்கு 54 சென்ட்கள் அல்லது 0.67% அதிகரித்து $81.11ஆக விற்பனை செய்யப்படுகிறது. முன்னதாக, இதன் விலை அதிகபட்சமாக $82.30 வரை காணப்பட்டது.

WTI மசகு எண்ணெய் விலையானது ஒப்பந்தக் காலம் முடிவடைவதற்கு முன்னதாக, $2.02 அல்லது 2.64% அதிகரித்து, ஒரு பீப்பாய் WTI மசகு எண்ணெய் $78.62ஆக இருந்தது. இதன் ஆகஸ்ட் மாதத்துக்கான அடுத்த ஒப்பந்த விலை $1.43ஆக அதிகரித்து, பீப்பாய் ஒன்றுக்கு $77.28ஆக இருந்தது. கடந்த வெள்ளிக்கிழமை (19) அமெரிக்க சந்தைக்கு விடுமுறை என்பதால் அன்று இறுதி விலை நிர்ணயம் செய்யப்படவில்லை.

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேலும் அமெரிக்காவும் மீறியதாகக் கூறி, ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் மூடுவதாக ஈரான் அறிவித்தது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (21) அவ்வழியாகச் சென்ற கப்பல்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்திருந்தது என கப்பல் போக்குவரத்து தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்காலிக அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஈரானிய அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடினார். அதேவேளை, ஈரான் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தினார்.

மறுபுறம், லெபனானில் இடம்பெறும் போரை நிறுத்துவதாக தான் கொடுத்த வாக்குறுதியை அமெரிக்கா நிறைவேற்றவில்லை என ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா அமைப்புடனான போர்நிறுத்தம் அமுலுக்கு வந்த அடுத்த நாளான சனிக்கிழமை (20), லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் குறைந்தது 20 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் அரசு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

வளைகுடா பகுதியில் தேங்கியிருந்த மசகு எண்ணெய் விநியோகிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பாலும், அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக ஈரான் மீதான தடைகள் நீக்கப்படலாம் என்ற நம்பிக்கையாலும் கடந்த வாரம் எண்ணெய் விலைகள் 8%க்கும் அதிகமாக சரிந்திருந்தன.

கடந்த திங்கட்கிழமை முதல் இதுவரை 25 மில்லியனுக்கும் அதிகமான ஈரானிய எண்ணெய் பீப்பாய்கள் இந்தத் தடையைத் தாண்டிச் சென்றுள்ளதாக தேசிய ஈரானிய எண்ணெய் நிறுவனத்தின் தலைவர் ஹமித் போவார்ட் நேற்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், ஐக்கிய அரபு அமீரகம், குவைத் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் கடந்த வாரத்தில் தங்களது வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான எண்ணெயை வழங்க முன்வந்துள்ளன.

ஈராக் தனது மசகு எண்ணெய் உற்பத்தியை படிப்படியாக நாள் ஒன்றுக்கு 4.2 மில்லியன் முதல் 4.3 மில்லியன் பீப்பாய்களாக உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments