
கற்பிட்டி துப்பாக்கி சூட்டு வலயத்தில் (Kalpitiya firing range) கடந்த ஜூன் 17ஆம் திகதி குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சியின் போது, விமானப்படை வீரர்களுக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை குறித்து இலங்கை விமானப்படை (SLAF) விசேட விசாரணையை ஆரம்பித்துள்ளது.
விமானப்படை தளபதியினால் நியமிக்கப்பட்டுள்ள விசேட விசாரணைச் சபையொன்றின் ஊடாக இவ்விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடமையில் ஈடுபட்டிருந்த ஏழு விமானப்படை வீரர்களும், ஒரு பொலிஸ் விசேட அதிரடிப்படை (STF) அதிகாரியும் இணைந்து துப்பாக்கி சூட்டு வலயத்தில் தங்கியிருந்த மூன்று சிவிலியன்களிடம் அவர்களின் அடையாளம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். இதன்போது, அவர்களில் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தர் என்பதும், மற்ற இருவர் அவருடன் வந்த சிவிலியன்கள் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டதாக விமானப்படையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குண்டு செயலிழக்கச் செய்யும் பயிற்சி நடவடிக்கைகள் இடம்பெறும் காலப்பகுதியில், அப்பகுதி பொதுமக்கள் நுழைவதற்கு தடைசெய்யப்பட்ட பாதுகாக்கப்பட்ட வலயப் பகுதியாக பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இதன்போது, கடமையில் இருந்த அதிகாரிகள் அங்கிருந்த சிவிலியன்களிடம் விசாரணை நடத்திய போதே இந்த பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, தனிநபர் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும், ஆபத்தான சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் தேவையான பாதுகாப்பு வழிமுறைகளை இலங்கை விமானப்படை பின்பற்றியுள்ளதாக விமானப்படை மேலும் தெரிவித்துள்ளது.



0 Comments