
அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் (COPE) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சமரவீர தலைமையிலான இலங்கைப் பாராளுமன்ற தூதுக்குழுவினர் பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் இங்கிலாந்து கிளையும் (CPA UK), இலங்கை பாராளுமன்றமும் (CPA இலங்கை கிளை) கூட்டாக இணைந்து 2026 ஜூன் மாதம் 16 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை இங்கிலாந்தில் ஏற்பாடு செய்த ஐக்கிய இராச்சியம் – இலங்கைப் பாராளுமன்ற நிகழ்ச்சித்திட்டத்தில்’ பங்கேற்கும் பொருட்டு ஐக்கிய இராச்சியத்திற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது.
இக்குழுவில் பாராளுமன்ற உறுப்பினர்களான கயந்த கருணாதிலக்க, எஸ்.எம். மரிக்கார், வைத்தியர் ஜகத் குணவர்தன, சட்டத்தரணி துஷாரி ஜயசிங்க, கந்தசாமி பிரபு, தனுஷ்க ரங்கநாத், ருவன் விஜேவீர, பாராளுமன்றச் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மற்றும் படைக்கலச்சேவிதர் குஷான் சம்பத் ஜயரத்ன ஆகியோரும் உள்ளடங்கியிருந்தனர்.
இலங்கைப் பாராளுமன்றத்திற்கும் மற்றும் ஐக்கிய இராச்சியம் பாராளுமன்றத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பையும் கூட்டுறவையும் வலுப்படுத்துவதே வெஸ்ட்மின்ஸ்டரில் உள்ள இங்கிலாந்து பாராளுமன்றத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகவிருந்தது. பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் ஆட்சிமுறை சார்ந்த அறிவு, அனுபவங்கள் மற்றும் சிறந்த செயன்முறைகள் என்பவற்றின் பரிமாற்றத்தை மேம்படுத்துவதும் இதன் நோக்கத்தில் உள்ளடங்கியிருந்தது.
இந்நிகழ்ச்சித்திட்டம் முழுவதும், ஒப்பீட்டுப் பாராளுமன்ற முறைமைகள், குழுக்களின் கட்டமைப்புகள் மற்றும் மேற்பார்வைப் பொறிமுறைகள், சட்டவாக்கம் மற்றும் சட்டவாக்கத்திற்குப் பின்னைய ஆய்வுகள், பாராளுமன்ற நியமங்கள் மற்றும் சிறப்புரிமைகள், நிதிசார் ஆய்வுகள், பொதுப் பொறுப்புக்கூறல், பாராளுமன்றத்தை நவீனமயமாக்கல் மற்றும் பொதுமக்களுடனான ஈடுபாடு என்பன உள்ளிட்ட, பரந்த அளவிலான பாராளுமன்ற விவகாரங்களில் ஒருமுகப்படும் தொடர்ச்சியான கலந்துரையாடல்களிலும், அவதானிப்புகளிலும், ஊடாடும் அமர்வுகளிலும் இக்குழு பங்கேற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தின் குழு நடவடிக்கைகள் மற்றும் பிரதமருக்கான கேள்வி நேரம் என்பன உள்ளிட்ட பாராளுமன்ற அமர்வுகளை நேரடியாக அவதானிப்பதன் மூலம், ஐக்கிய இராச்சியத்தின் பாராளுமன்ற நடைமுறைகள் தொடர்பான நேரடி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளையும் வழங்கியது. இதன் போது இக்குழுவினர் பொதுச் சபை உறுப்பினர்கள், பிரபுக்கள் சபை உறுப்பினர்கள், சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடனும் மற்றும் பல்வேறு பாராளுமன்ற அமைப்புகளுடனும் மற்றும் அமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நிபுணர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
தொடர் கலந்துரையாடல்களில், பயனுள்ள மேற்பார்வையை உறுதிசெய்வதில் தெரிவுக் குழுக்களின் வகிபங்கு, பொதுக் கணக்குகள் பற்றிய குழுக்கள் மற்றும் அது சார்ந்த நிறுவனங்கள் என்பவற்றின் ஊடாக நிதிசார் பொறுப்புக்கூறலை வலுப்படுத்துதல், பொதுமக்களின் பங்களிப்பையும் மற்றும் நம்பிக்கையையும் மேம்படுத்துவதில் பாராளுமன்ற வெளிக்களத் தொடர்புகளின் பங்களிப்பு, மற்றும் பாராளுமன்ற நடைமுறைகளின் பன்முகத்தன்மை, உள்ளடக்கம் மற்றும் பெண்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான முன்முயற்சிகள் என்பன இந்நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடங்கியிருந்தன.
இக்குழுவினர், ஜனநாயகத்திற்கான வெஸ்ட்மினிஸ்டர் மன்றத்தின் (WFD) பிரதிநிதிகளுடனும் மற்றும் இலங்கைக்கான சர்வகட்சிப் பாராளுமன்றக் குழுவின் (APPG) உறுப்பினர்களுடனும் கலந்துரையாடல்களை நடத்தினர். இது பாராளுமன்றத்தை வலுப்படுத்தும் முன்முயற்சிகள் பற்றிய கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்கும், எதிர்கால ஒத்துழைப்புக்கான வழிகளை ஆராய்வதற்குமான வாய்ப்புகளை வழங்கியது.
இது தவிர, இக்குழுவினர் பொதுநலவாயப் பாராளுமன்ற சங்கத்தின் (CPA) செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் அவர்களையும் மற்றும் CPA தலைமையக அதிகாரிகளையும் சந்தித்து, இலங்கைப் பாராளுமன்றத்தின் ஊடாக அவர்கள் தற்போது மேற்கொண்டு வருகின்ற பணிகள் பற்றி கலந்துரையாடியதோடு, எதிர்காலத்தில் சாத்தியமான கூட்டு ஈடுபாடுகள் பற்றியும் ஆராய்ந்தனர்.
இவ்விஜயத்தின் போது, இக்குழுவினருக்கு ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் ஆதரவும் உதவியும் கிடைத்திருந்தன. உயர்ஸ்தானிகர் மாண்புமிகு நிமால் சேனாதீர மற்றும் தூதரக அதிகாரிகள் இக்குழுவினருடன் இணைந்து செயற்பட்டனர். இவர்கள் இந்நிகழ்ச்சித்திட்டம் சார்ந்த விடயங்களையும் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏற்பாடுகளையும் எளிதாக்கிக்கொடுத்தனர்.
இந்நிகழ்ச்சித்திட்டம், இலங்கைப் பாராளுமன்றத்திற்கும், ஐக்கிய இராச்சியப் பாராளுமன்றத்திற்கும் இடையிலான நீண்டகால உறவை மேலும் வலுப்படுத்தியதோடு, பயனுள்ள பாராளுமன்ற நடைமுறைகள், ஜனநாயக ஆட்சிமுறை மற்றும் நிறுவன ரீதியான அபிவிருத்தி என்பவற்றை மேம்படுத்துவதில் பாராளுமன்ற உறுப்பினர்களினதும் அதிகாரிகளினதும் அறிவையும் மற்றும் நிபுணத்துவத்தையும் மேம்படுத்தவும் உதவியது.



0 Comments