Trending

6/recent/ticker-posts

Live Radio

கொழும்பு பல்கலையில் 71 மாணவர்களுக்கு டெங்கு - சில விரிவுரைகள் இணையவழியில்...!



கொழும்பு பல்கலைக்கழகத்தில் 71 மாணவர்கள் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பேராசிரியர் இந்திக கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் ஐந்து பேர் தற்போது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களில் பெரும்பாலானோர் கலைப்பீடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களின் கல்விச் செயல்பாடுகள் பாதிக்கப்படாத வகையில், ஒரு வார காலத்திற்கு பல பீடங்களின் விரிவுரைகளை இணையவழி மற்றும் கலப்பு (Hybrid) முறையில் நடத்த பல்கலைக்கழக நிர்வாக அதிகாரசபை தீர்மானித்துள்ளது.

டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் மாணவர்களின் உடல்நிலை தொடர்ச்சியாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் துணைவேந்தர் தெரிவித்தார்.

டெங்கு நோயிலிருந்து குணமடைய ஓய்வு அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, தற்போது பல்கலைக்கழக வளாகத்தின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்த துணைவேந்தர், காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறு மாணவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

மேலும், டெங்கு பரவல் காரணமாக கொழும்பு பல்கலைக்கழகம் மூடப்படவில்லை என்றும், பல்கலைக்கழகத்தை மூடும் எந்தத் திட்டமும் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments