
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்த போது இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை எதிர்வரும் ஒக்டோபர் 13ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் இன்று (14) இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
விசாரணைகளின் ஆரம்ப அறிக்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், மேலதிக விசாரணை முன்னேற்றங்களை அறிவிக்க புதிய திகதி வழங்குமாறும் கோரப்பட்டது.
இந்த வழக்கில் முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன முதலாவது சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்த நிலையில், அவர் அண்மையில் உயிரிழந்துள்ளார். அவரது மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க மற்றும் ஷமிந்திர ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக நீதிமன்றம் முன்னதாக பிடியாணை பிறப்பித்திருந்தது.
இதன்போது, வழக்கின் விசாரணை முன்னேற்றம் தொடர்பான விரிவான அறிக்கையை ஒக்டோபர் 13ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



0 Comments