
போலி வெளிநாட்டு கடவுச்சீட்டைத் தயாரிப்பதற்கு உடந்தையாக செயற்பட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டில், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதி கட்டுப்பாட்டாளர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அவர் நேற்று கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னையிலிருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட திட்டமிட்ட குற்றக் கும்பல் உறுப்பினர் ஒருவரின் புகைப்படத்துடன், வேறொரு நபரின் தரவுகளை உள்ளடக்கிய விண்ணப்பத்தை முறையான பரிசோதனையின்றி ஏற்றுக்கொண்டு, வெளிநாட்டு கடவுச்சீட்டை வழங்க உடந்தையாக செயற்பட்டுள்ளதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மாத்தறை பகுதியைச் சேர்ந்த 51 வயதுடையவராவார்.
மேற்படி சம்பவம் தொடர்பாக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இடம் பெற்று வரும் வழக்கு தொடர்பான நீதவானின் உத்தரவுக்கமைய பொலிஸ் மா அதிபருக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. அது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மோசடி விசாரணைப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



0 Comments