Trending

6/recent/ticker-posts

Live Radio

Update: புதுப்பிக்கத்தக்க எரிசக்தி கொள்முதல் விலைகள் - பொதுமக்களின் கருத்துக்கேட்பு இன்றுடன் நிறைவு...!



நாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பது தொடர்பான பொதுமக்களின் கருத்துக்கேட்பு நடவடிக்கை இன்றுடன் (22) நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கை மின்சாரச் சீர்திருத்தச் சட்டத்தின் பிரகாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு, இலங்கை மின்சார சபையின் பின்தொடர் நிறுவனங்களால் கொள்வனவு செய்யப்படும் மின்சாரத்திற்கான விலைகள் மற்றும் விலைச் சூத்திரங்களை நிர்ணயிக்கும் அதிகாரம் இலங்கை பொதுப் பயன்பாடுகளின் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை அடுத்த ஆறு மாதங்களுக்கான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின்சாரக் கொள்முதல் விலை, இந்தக் கருத்துக்கேட்பு செயற்பாட்டின் போது பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் என ஆணைக்குழுவின் பெருநிறுவனத் தொடர்பாடல் பணிப்பாளர் ஜயநாத் ஹேரத் தெரிவித்தார்.

சூரிய சக்தி, காற்று மற்றும் உயிரிப் பொருள் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலைச் சூத்திரங்கள் தயாரிக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இதன் அடிப்படையில் மின்சார விலைகளை நிர்ணயிப்பது குறித்த பொதுமக்களின் கருத்துக்கேட்புச் செயற்பாடு சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்டது.

இந்தக் காலப்பகுதியில் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு, விலை நிர்ணயச் செயற்பாட்டிற்குத் தேவையான தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments