
நீதிமன்றத்துக்கு செல்ல முடியாது எனக் கூற தமிழ்நாட்டு நிதியமைச்சர் மரிய வில்சன் இங்கிலாந்தின் அரசர் அல்ல, நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோதே நீதிமன்றத்தில் ஆஜராகி இருக்கிறார் என புதுச்சேரி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மனுதாரர் மாநிலத்தின் நிதியமைச்சர்தான். அமைச்சராவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜரான மனுதாரர், பதவிக்கு வந்தபிறகு ஆஜராக மாட்டாரா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், கடந்த 2022 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 8 ஆம் திகதி புதுச்சேரி, எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரர் மரிய குலோத் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று மரிய குலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை தாக்கியதாக லாஸ்பேட்டை பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
புதுச்சேரி குற்றவியல் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை இரத்து செய்யக்கோரி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்த மனு, நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மரிய வில்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடந்து வருவதால், நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த போதே நீதிபதி இவ்வாறு கண்டனம் தெரிவித்தார்.
இதன்போது புதுச்சேரி பொலிஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வேளாங்கண்ணி ஆலய கொடி ஏற்ற நிகழ்ச்சிக்கு அமைச்சர் செல்லவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதி, அமைச்சர் வேளாங்கண்ணி சென்று திரும்பும்போது, அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராகலாமே என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருக்க முடியாது. அமைச்சர் சட்டத்துக்கு மேலானவர் அல்ல என்ற தகவலை மக்களிடம் கொண்டுச் சேர்க்க விரும்பவில்லை எனக்கூறி, எந்த திகதியில் அமைச்சர் புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராவார் எனத் தெரிவிக்கும்படி அவர் தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.



0 Comments