
இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் மற்றும் தொழிலதிபர் காவ்யா மாறன் ஆகியோரின் திருமணம் எளிமையான முறையில் நடைபெற்றதாகத் தோன்றினாலும், அதற்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனிருத் மற்றும் அவரது காதலியான காவ்யா மாறன் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 11ஆம் திகதி கிரீஸில் பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் திருமண நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் அனிருத்திடம் வழங்கிய சங்கிலியை அவர் காவ்யா மாறனுக்கு அணிவித்ததாகவும், அதேபோன்று திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் காவ்யா மாறனிடம் வழங்கிய சங்கிலியை அவர் அனிருத்துக்கு அணிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்தத் திருமணத்தை மு.க. ஸ்டாலின் சுயமரியாதைத் திருமண முறையில் நடத்தி வைத்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திருமணத்திற்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சென்னையிலிருந்து இரு குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் கிரீஸ் செல்வதற்காகத் தனி விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டமை, கிரீஸில் அமைந்துள்ள பிரபலமான ஃபோர் சீசன்ஸ் அஸ்டர் பேலஸ் ஹோட்டலில் திருமண நிகழ்வு நடத்தப்பட்டமை, விருந்தினர்களுக்கான தங்குமிட வசதிகள் உள்ளிட்ட பல்வேறு செலவுகளை உள்ளடக்கியே இந்தத் தொகை மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், எதிர்வரும் 21ஆம் திகதி சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெறவுள்ளதாகக் கூறப்படும் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான செலவுகளையும் சேர்த்தால், மொத்தச் செலவு 150 கோடி ரூபாயை எட்டக்கூடும் என்றும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
எனினும், திருமணத்திற்காக 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக மணமகன் மற்றும் மணமகள் தரப்பினர் இதுவரை உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.
சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனின் சொத்து மதிப்பு சுமார் 24,600 கோடி ரூபாய் எனக் கூறப்படும் நிலையில், மகளின் திருமணத்திற்காக இவ்வளவு பெரிய தொகை செலவிடப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலும் பேசுபொருளாகியுள்ளது.
இதற்கிடையில், திருமணப் புகைப்படங்கள் வெளியானதைத் தொடர்ந்து, அனிருத் – காவ்யா மாறன் திருமணம் சுயமரியாதைத் திருமண முறையில் நடைபெற்றதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.
இந்தச் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், திமுகவைச் சேர்ந்த அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளப் பதிவில் இது சுயமரியாதைத் திருமணம் என்பதை உறுதிப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பிராமண சமூகத்தைச் சேர்ந்த அனிருத் ரவிச்சந்தர், வழக்கமான வைதீகத் திருமண முறைக்குப் பதிலாக சுயமரியாதைத் திருமண முறையைத் தெரிவு செய்திருப்பது சமூக வலைத்தளங்களிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் பேசுபொருளாகியுள்ளது.



0 Comments