
ஈரானின் கெஷ்ம் தீவின் மீது அமெரிக்க இராணுவம் நேற்று திங்கட்கிழமை (2) தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீவின் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க சொத்துக்களைப் பாதுகாப்பதற்காக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க தரப்பு விளக்கமளித்துள்ளது.
அமெரிக்க விமானத்தை நோக்கி ஈரான் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்குப் பதிலடியாகவே அமெரிக்கா இந்தத் தாக்குதலில் ஈடுபட்டதாக அமெரிக்க இராணுவ அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், இது பாரியதொரு தாக்குதல் அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது.
"அமெரிக்கச் சொத்துக்களுக்கு எதிராக ஈரான் தரைப்பரப்பிலிருந்து வான் நோக்கிப் பாயும் ஏவுகணைகளைப் பயன்படுத்தியதால், இது ஒரு தற்காப்பு இராணுவ நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்டது" என்று மற்றொரு அமெரிக்க அதிகாரி சர்வதேச ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
இன்று (3) அமெரிக்காவில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இன்றைய தினம் மாலை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாளில் அமெரிக்க இராணுவம் ஈரான் தீவின் மீது நடத்தப்பட்ட தாக்குதலானது இந்த மோதல் தொடர்ந்து அதிகரிப்பதற்கான வாய்ப்பாகவும் அறிகுறியாகவும் காணப்படுவதாக பல்வேறு தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.



0 Comments