Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சீன ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிலிருக்கலாம்: அமெரிக்க வலுசக்தி முகவரகம்...!


சீனாவின் ஆய்வுகூடம் ஒன்றிலிருந்து கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்திருக்கலாம் என அமெரிக்காவின் வலுசக்தி திணைக்களம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவின் தேசிய புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் அவ்ரில் டேனிக்கா ஹெய்ன்ஸின் அலுவலகத்தின் இரகசிய அறிக்கையொன்றில் இவ்விடயம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வோல் ஸ்ரீட்ட் ஜேர்னல் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் எவ்வாறு வெளிவந்தது என்பது தீர்மானிக்கப்படவில்லை என அமெரிக்க வலுசக்தி திணைக்களம் முன்னர் கூறியிருந்தது.

இந்நிலையில், அந்த வைரஸ், ஆய்வுகூடத்திலிருந்தே பரவியிருக்கலாம் என மேற்படி திணைக்களம் குறைந்த நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளதாக வோல் ஸ்ரீட் ஜேர்னல் மற்றும் நியூ யோர்க் டைம்ஸ் ஆகியன தெரிவித்துள்ளன.

புதிய புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவின் தேசிய ஆய்வுகூடங்கள் வலையமைப்பொன்றை இந்த திணைக்களம் மேற்பார்வை செய்கிறது. உயிரியல் ஆராய்ச்சி ஆய்வுகூடங்களும் இவற்றில் அடங்கும் என்பதால் மேற்படி தீர்மானம் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

எனினும், இவ்விடயத்தில் அமெரிக்காவின் புலனாய்வு முகவரகங்களுக்கு இடையில் வித்தியாசமான கருத்துகள் உள்ளதாக வெள்ளை மாளிகை நேற்று ஞாயிற்;றுக்கிழமை தெரிவித்துள்ளது.

கொவிட் இயற்கையாக பரவியிருக்கலாம் என அமெரிக்காவின் தேசிய புலனாய்வு முகவரகங்களில் 4 முகவரகங்கள் நம்புகின்றன. ஏனைய இரு முகவரகங்களும் இது தொடர்பில் தீர்மானிக்கவில்லை என வோல் ஸ்ரீட் ஜேர்னல் தெரிவித்துள்ளது.

இவ்விடயத்தில் பல்வேறு பார்வைகள் உள்ளன என அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜெக் சுலீவன் கூறியுள்ளார்.

இக்கேள்விக்கு புலனாய்வு சமூகம் இதுவரை தீர்க்கமான பதிலை தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

எனினும் ஆய்வுகூடத்திலிருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்பதை சீனா நிராகரித்துள்ளது.

சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் மாவோ நிக் இன்று செய்தியாளர் மாநாடொன்றில் பேசுகையில், சீனா மற்றும் உலக சுகாதார ஸ்தாபனம் நியமித்த கூட்டு நிபுணர்கள் குழுவின் தீர்மானித்தின்படி, இவ்வைரஸ் பரவுவதற்கு ஆய்வுகூட கசிவு இருப்பற்கான சாத்தியமில்லை எனக் கூறியுள்ளார்.

கொவிட் மூலம் தொடர்பான விசாரணைகளை தான் கைவிடவில்லை என இம்மாத மத்தியில் உலக சுகாதார ஸ்தாபனம் கூறியதுடன், இதை கண்டறிவதற்கு சாத்தியமான அனைத்தையும் தான் செய்யவுள்ளதாக தெரிவித்திருந்தது.

Post a Comment

0 Comments