Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வழக்கொன்றிற்காக ஆஜரான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது...!


பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டு தலைநகரான இஸ்லாமாபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இம்ரான் கான், கடந்த வருடம் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் மீது தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலுவையில் உள்ள பல்வேறு வழக்குகளில் ஒன்றிற்காக தலைநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது கைது செய்யப்பட்டார்.

இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI) கட்சியின் அதிகாரிகள், அவர் கைது செய்யப்பட்ட பிறகு ஆதரவாளர்களை வீதிக்கு வரும்படி வலியுறுத்தியுள்ளனர். ஆனால் 4 பேருக்கு மேல் வீதியில் கூடுவதைத் தடைசெய்யும் உத்தரவு கண்டிப்பாக அமுல்படுத்தப்படும் என பொலிசார் எச்சரித்துள்ளனர்.



இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளாரா அல்லது வேறு இடத்திற்கு மாற்றப்பட்டாரா என்பது உடனடியாகத் தெரியவில்லை.

"காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்" என ஊழல் வழக்கொன்றை குறிப்பிட்டு இஸ்லாமாபாத் பொலிஸ் உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த நீதிமன்றத்திற்கு வெளியே நூற்றுக்கணக்கான PTI ஆதரவாளர்கள் பாதுகாப்பு அதிகாரிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் காட்சிகளை உள்ளூர் தொலைக்காட்சி நிலையங்கள் காண்பித்து வருகின்றன.

ஒரு சிரேஷ்ட அதிகாரி தன்னைக் கொல்ல சதி செய்ததாக மீண்டும் குற்றம் சாட்டிய நிலையில், "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை" முன்வைப்பதற்கு எதிராக இராணுவம் அவரை எச்சரித்து அடுத்த நாள் இம்ரான் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் உள்ள நிலையில், ஆளும் கூட்டணி அரசாங்கத்திற்கு எதிராக முன்கூட்டியே தேர்தல்களுக்கு இம்ரான் கானின் கட்சி அழுத்தம் கொடுத்து வருகிறது.

கடந்த வருடம் இம்ரான் கான் காலில் சுடப்பட்ட சம்பவமானது, ஒரு திட்டமிட்ட கொலை முயற்சி எனவும், சிரேஷ்ட புலனாய்வு அதிகாரியான மேஜர் ஜெனரல் பைசல் நசீர் இதில் தொடர்புடையவர் எனவும், இம்ரான் கான் மீண்டும் மீண்டும் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.

ஆயினும் இது ஒரு ஜோடிக்கப்பட்ட பொய்யான குற்றச்சாட்டு எனவும் மிகவும் துரதிர்ஷ்டவசமானதும், வருந்தத்தக்கதும் எனவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும், இராணுவத்தின் சேவைகள் மக்கள் தொடர்பு பிரிவு (ISPR) விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறித்த படுகொலை முயற்சி ஒரு தனியான துப்பாக்கிதாரியின் செயல் என்று பாகிஸ்தான் அரசாங்கம் கூறியுள்ளது.

கொலை முயற்சியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு, சர்ச்சைக்குரிய வகையில் ஊடகங்களில் கசிந்த வீடியோவில் குறித்த விடயத்தை ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த விடயங்களை நிராகரித்துள்ள இம்ரான் கான், உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண்பது தொடர்பில் தனது முறைப்பாட்டை அதிகாரிகள் ஏற்க மறுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் (09) நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட வீடியோ அறிக்கையில் தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்திய இம்ரான் கான், "உண்மைகளை நான் இட்டுக்கட்ட எந்தவொரு காரணமும் இல்லை" என்றும் கூறியுள்ளார்.

கான் பதவி நீக்கம் செய்யப்பட்டதில் இருந்து அவர் மீது சுமத்தப்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொர்பான வழக்குகளை அவர் எதிர்கொண்டு வருகிறார்.

அடுத்தடுத்து வந்த பாகிஸ்தான் அரசாங்கங்கள் தங்கள் எதிரிகளை மௌனமாக்குவதற்காக இவ்வாறான விடயங்களை மேற்கொள்வதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

உலகின் ஆறாவது பெரிய இராணுவமான பாகிஸ்தானின் இராணுவம், அந்நாட்டின் அரசாங்கம் மீது தேவையற்ற செல்வாக்கைக் கொண்டுள்ளது.

1947 இல் நாடு சுதந்திரம் பெற்றதில் இருந்து குறைந்தது மூன்று இராணுவ சதிகளை அந்நாட்டு இராணுவம் நடாத்தியுள்ளதோடு, 3 தசாப்தங்களுக்கும் மேலாக அந்நாட்டை ஆட்சி செய்தும் உள்ளது.

Post a Comment

0 Comments