Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தில் சகோதரத்துவம்...!


அனைத்து மனிதர்களுக்கும் அவரவர் உரிமைகளை நியாயமாகப் பங்கிட்டு வழங்கக்கூடிய ஒரு அமைப்பு இருக்குமானால் அங்கு தொழிலாளர் உரிமை, பெண் உரிமை, குழந்தைகள் உரிமை என்று தனித்தனியாகப் போராட வேண்டிய அவசியம் எழுவதில்லை.

ஒரு சமூகம் என்றால் அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் இளைஞர் எனவும் தொழிலாளிகள், விவசாயிகள், வணிகர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர் இன்னும் இதுபோன்ற பலரும் இருப்பார்கள். அங்கு பற்பல மொழிகள், நிறங்கள், இனங்கள், மதங்கள் மற்றும் கொள்கைகளைக் கொண்டவர்களும் இருப்பார்கள்.

அப்படிப்பட்ட பலர் கலந்து வாழும் சமூகத்தில் நல்லிணக்கம் உருவாக வேண்டுமானால் மனித உறவுகள் வலுப்பட வேண்டும். அத்துடன் சக மனிதர்களின் உரிமைகள் மதிக்கப்படவும், மீட்கப்படவும், வழங்கப்படவும் வேண்டும். மனித உரிமை மீறல்கள் கட்டுப்படுத்தப்படவும் வேண்டும்.

மனித உரிமைகள் நியாயமான முறையில் பங்கீடு செய்யப்பட வேண்டுமானால் அதற்குரிய நுண்ணறிவும் அதிகாரமும் தகுதியும் இவ்வுலகைப் படைத்தவனும் அதன் சொந்தக்காரனுமான இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பதை பகுத்தறிவு கொண்டு ஆராயும் எவராலும் நிச்சயமாகக் கண்டுகொள்ள இயலும்.

அந்த இறைவன் தொகுத்து வழங்கும் வாழ்வியல் திட்டமே இஸ்லாம். இவை ஏட்டளவில் இல்லாமல் பேச்சளவில் நில்லாமல் இந்த வாழ்வியலை வாழ்க்கை நெறியாக ஏற்ற அனைவரிடமும் நடைமுறைக்குக் கொண்டு வருகிறது இஸ்லாம்.

அல்லாஹ்தஆலா அல் குர்ஆனில் இதற்கான அடிப்படையை பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறான்.

'மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள். அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள். உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல் குர்ஆன் 4:1)

அதாவது அனைத்து மனிதகுலமும் ஆதித் தந்தை மற்றும் ஆதித் தாயின் சந்ததிகளே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களே என்பதையும் நம் அனைவருக்கும் இறைவன் ஒருவனே என்பதையும் அடிப்படையாக வலியுறுத்தி​யே உலகளாவிய சகோதரத்தையும் சமத்துவத்தையும் அல் குர்ஆன் நிறுவியுள்ளது.

அதேநேரம் நாம் அனைவரும் அந்த இறைவனின் பரிபாலனத்திலும் கண்காணிப்பிலும் உள்ளோம் என்பதை உணர்த்தியுள்ள அல் குர்ஆன், நம் செயல்களுக்காக நாம் இறைவனுக்கு பதில் சொல்லியாக வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் உண்டாக்குகிறது இந்த இறை வசனம்.

நாம் அனைவரும் ஒரே குடும்பத்தினரே என்ற உணர்வு மேலோங்கும்போது சக மனிதனை தனது சகோதரனாக அல்லது சகோதரியாகப் பார்க்கும் பண்பு மனிதனுக்கு வந்துவிடும். அதனால் தொழிலாளி என்பவன் முதலாளியின் சகோதரனே. விற்பவன் வாங்குபவனின் சகோதரனே என்ற உணர்வுடன் உரிமை மீறல்கள் விசாரிக்கப்பட உள்ளன என்ற உணர்வும் மேலோங்கினால் அங்கு மனித உரிமை மீறல்களும் மோசடிகளும் ஒழிந்து ஒரு தூய்மையான சமூகம் அமைகிறது. அங்கு நிறத்தினதும், இனத்தினதும், மொழியினதும், நாட்டினதும் பெயரால் உருவாகும் பிரிவினை வாதங்களும் ஏற்ற தாழ்வுகளும் கிள்ளி எறியப்படுகின்றன. மாற்று மொழியினரும் நிறத்தவரும் அண்டை மாநிலத்தவரும் நம் சகோதரர்களே என்ற உணர்வு மக்களை ஆட்கொண்டால் இன்று நடக்கும் பெரும்பாலான முரண்பாடுகளை தவிர்த்துக் கொள்ளலாம்.

இறைவனுக்கு கட்டுப்பட்டு வாழுதல் என்ற கொள்கைக்குப் பெயரே இஸ்லாம் என்று அரபு மொழியில் அறியப்படுகிறது. இதை ஏற்றுக்கொள்ளும் போது மனிதன் தன்னைப் படைத்தவனை வணங்குவதோடு சகமனிதர்களின் உரிமையைப் பேண வேண்டிய கட்டாயத்திற்கும் உட்படுத்தப்படுகிறான்.

இஸ்லாத்தின் கட்டாயக் கடமைகளில் ஒன்று ஐவேளைத் தொழுகையாகும். இதன்மூலம் மேற்படி அடிப்படைகள் மனிதனுக்கு அடிக்கடி நினைவூட்டபடுகிறது. அத்துடன் இத்தொழுகைகளைக் கூட்டாக தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று நிறைவேற்றுவதன் மூலம் மனித சமத்துவமும் சகோதரத்துவமும் உறுதிப்படுத்தப்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் திட்டத்தைஏற்று பின்பற்றுவோரிடம் எவ்விதமான மாற்றங்களை அது ஏற்படுத்தியது, தொடர்ந்தும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக கீழ்கண்ட சம்பவம் நல்ல எடுத்துக்காட்டாகும்.

'நான் நபித்தோழர் அபூதர் (ரழி) அவர்களை (மதீனாவிற்கு அருகிலுள்ள) 'ரபதா' என்ற இடத்தில் சந்தித்தேன். அப்போது அவரின் மீது ஒரு ஜோடி ஆடையும் (அவ்வாறே) அவரின் அடிமை மீது ஒரு ஜோடி ஆடையும் கிடப்பதைப் பார்த்தேன். நான் (ஆச்சரியமுற்றவனாக) அதைப் பற்றி அவரிடம் கேட்டதற்கு, 'நான் (ஒரு முறை) ஒரு மனிதரை ஏசிவிட்டு அவரின் தாயையும் குறை கூறி விட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'அபூதர், அவரையும் தாயையும் சேர்த்துக் குறை கூறி விட்டீரே! நீர் அறியாமைக் காலத்துப் பழக்கம் குடி கொண்டிருக்கும் மனிதராகவே இருக்கிறீர்! உங்களுடைய அடிமைகள் உங்களின் சகோதரர்களாவர். அல்லாஹ்தான் அவர்களை உங்கள் அதிகாரத்தின் கீழ் வைத்திருக்கிறான். எனவே ஒருவரின் சகோதரர் அவரின் அதிகாரத்தின் கீழ் இருந்தால் அவர், தாம் உண்பதிலிருந்து அவருக்கும் புசிக்கக் கொடுக்கட்டும். தாம் உடுத்துவதிலிருந்து அவருக்கும் உடுத்தக் கொடுக்கட்டும். அவர்களின் சக்திக்கு மீறிய பணிகளைக் கொடுத்து அவர்களைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவர்களை நீங்கள் சிரமமான பணியில் ஈடுபடுத்தினால் நீங்கள் அவர்களுக்கு உதவியாய் இருங்கள்' என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்' (இதனால்தான் நான் அணிவது போன்று என் அடிமைக்கும் உடை அளித்தேன்) என அபூதர் (ரழி) அவர்கள் கூறினார்" என மஃரூர் குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம்: புஹாரி)

ஆகவே இஸ்லாத்தின் வழிக்காட்டல்களுக்கு அமைய சகோதரத்துவத்தைப் பேணி இறை அருளைப் பெற்றுக் கொள்வோம்.

Post a Comment

0 Comments