Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 'லால் சலாம்' படத்தின் வெளியீட்டு திகதி அறிவிப்பு...!


சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் 'லால் சலாம்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

'3', 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'லால் சலாம்'. இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், விக்னேஷ், லிவிங்ஸ்டன், செந்தில், ஜீவிதா, கே. எஸ். ரவிக்குமார், தம்பி ராமையா, நிரோஷா, அனந்திகா சனில்குமார், விவேக் பிரசன்னா, தான்யா பாலகிருஷ்ணா, தங்கதுரை, ஆதித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இவர்களுடன் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும் இந்திய துடுப்பாட்ட அணியின் முன்னாள் நட்சத்திர வீரரான கபில்தேவ் கௌரவ வேடத்தில் நடித்திருக்கிறார்.‌ விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் சுபாஷ்கரன் தயாரித்திருக்கிறார்.

இத் திரைப்படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாரான நிலையில்.., தற்போது வெளியீட்டு திகதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் இந்த திரைப்படம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் ஒன்பதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் வெளியாகிறது.

இதனிடையே சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் எனும் விரிவுபடுத்தப்பட்ட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாலும், சுப்பர் ஸ்டாரின் மூத்த வாரிசான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சிறிய இடைவேளைக்குப் பிறகு இப்படத்தை இயக்கியிருப்பதாலும், துடுப்பாட்ட விளையாட்டை மையப்படுத்தி 'லால் சலாம்' உருவாகி இருப்பதாலும் ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.‌

Post a Comment

0 Comments