மின்சாரசபை, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு போன்ற தரப்பினர் முன்வைத்த புள்ளிவிபரத் தகவல்கள் மற்றும் மின்சாரக் கட்டணத்தில் தாக்கம் செலுத்தும் ஏனைய சகல விடயங்களையும் விரிவாக மதிப்பாய்வு செய்து தற்பொழுது காணப்படும் மின்சாரக் கட்டணத்தை 33% குறைக்க முடியும் என நிபுணர்கள் கூறும் கருத்துக்களை கவனத்தில் கொண்டு மின்சார சபைக்கு நஷ்டம் ஏற்படாத வகையில் 2024ஆம் ஆண்டில் மின்சாரக் கட்டணத்தை ஆகக் குறைந்தது 20% இனால் குறைக்க வேண்டும் என பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ளது.
இதற்கமைய மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்குத் தேவையான பரிந்துரைகளை இம்மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க முடியும் எனப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவில் தெரிவித்தனர்.
பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டது.
நேரடியாகப் பொருளாதாரப் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கும், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்களைக் கண்டறிந்து அவற்றுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதன் ஊடாக நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவது, அந்நியச் செலாவணியை அதிகரிப்பது போன்ற இலக்குகளை அடைவதற்கான பரிந்துரைகளையும் குழு முன்வைத்திருந்தது.
இதற்கமைய, மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டமையால் நாடு முழுவதும் இதுவரையில் 10 இலட்சத்துக்கும் அதிகமான மின்சார இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டிருப்பதாகக் சுட்டிக்காட்டிய குழு, இதனால் கைத்தொழில்கள் மற்றும் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள இழப்பை சீர்செய்யும் நோக்கில் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணத்தில் 50% ஐ மாத்திரம் முதலில் வசூலித்து மின்சார இணைப்பை வழங்கி, எஞ்சிய தொகையை தவணை அடிப்படையில் வசூலிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குழு அறிவுறுத்தல் வழங்கியது.
நன்றி...
Daily-Ceylon
0 Comments