நடிகர் விஜய்சேதுபதியின் 50-வது படம், ‘மகாராஜா’. இதில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், பாய்ஸ் மணிகண்டன், அபிராமி உட்பட பலர் நடித்துள்ளனர். ‘தி ரூட்’ நிறுவனத்துடன் பேஷன் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. நித்திலன் சாமிநாதன் இயக்கியுள்ள இந்தப் படம் வரும் 14-ம் தேதி வெளியாகிறது.
படம் பற்றி விஜய் சேதுபதி கூறியதாவது: என் 50-வது படமாக ‘மகாராஜா’ அமைந்ததில் மகிழ்ச்சி. நித்திலனுடன் இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியது எனக்கு கிடைத்த அனுபவத்தின் பரிசு. ஒவ்வொருவரிடம் இருந்தும் நான் ஏதோ ஒன்றைக் கற்றுக் கொள்கிறேன். அது விமர்சனமோ, பாராட்டோ எதுவாக இருந்தாலும் சரி.அது என்னை யோசிக்க வைக்கிறது. நம்மை யோசிக்க வைக்கிற எதுவும் நம்மை முன்னெடுத்துதான் செல்லும். இது நான் உணர்ந்து அறிந்த ஒன்று. இந்த 50-வது படம் வரை என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி.
இந்தப் படத்தின் நாயகன், முடி திருத்தும் தொழிலாளி. அவனுக்கு மகாராஜா என்று பெயர் வைத்து அவன் இருக்கையை சிம்மாசனமாக்கியதை ரசிக்கிறேன். இயக்குநர் ஆகும் ஆசை இருக்கிறதா? என்று கேட்கிறார்கள். கண்டிப்பாக இருக்கிறது. கூடவே பயமும் இருக்கிறது. நான்கு பிரேமுக்குள் கதை சொல்ல புரியும்போது அதை செய்வேன். இவ்வாறு விஜய் சேதுபதி கூறினார்.
0 Comments