Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

வக்ப் சட்டத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்போம் - முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி...!


சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று (20) அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியத்தின் (All India Muslim Personal Law Board) சார்பாக அதன் பொதுச்செயலாளர் மவ்லானா பசுலுர் ரஹீம் முஜத்திதி அவர்கள் தலைமையில் ஒரு குழு சந்தித்தது.

இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா. எம்எல்ஏ. தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் தலைவர் மவ்லவி பி.ஏ. காஜாமுயீனுத்தீன் பாகவி. பேராசிரியர் பி நஸ்ருல்லா பாஷா. திரு. எச். அப்துர் ரகீப். திருமதி பாத்திமா முஸப்பர் எம்.சி. ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.

நடைபெற்று முடிந்த மக்களவை கூட்டத் தொடரில் ஒன்றிய பாஜக அரசு கொண்டு வந்த வக்ப் வாரியத் திருத்த மசோதாவை அறிமுக நிலையிலேயே எதிர்த்து அதனை நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்விற்கு அனுப்ப உதவியமைக்காக திமுக தலைவரும் முதலமைச்சருமான மு க ஸ்டாலின் அவர்களுக்கு குழு நன்றி தெரிவித்தது. நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் ஆய்வின் போதும் இச்சட்டத்தை அதில் இடம் பெற்றுள்ள திமுக உறுப்பினர்கள் எதிர்க்க வேண்டுமெனக் குழு கேட்டுக் கொண்டது.

அரசியல் சாசனத்திற்கு எதிராகவும் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையிலும் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள இச்சட்டத் திருத்தங்களின் அபாயகரமான கூறுகள் சிலவற்றை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தார்கள்.

அனுபவ பாத்தியதையில் உள்ள வக்பு சொத்தை அபகரித்தல் முஸ்லிமல்லாதவர்கள் நன்கொடையாகவோ சொத்துக்களையோ வக்ப் செய்வதைத் தடை செய்தல் நடைமுறையில் உள்ள வக்ப் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்தல் என ஏராளமான இடையூறுகளை இச்சட்டத் திருத்தங்கள் ஏற்படுத்தியுள்ளன என்பதை முதலமைச்சரிடம் விவரித்தார்கள்.

பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவோம் என்று மீண்டும் பேச்சுகள் எழுந்துள்ளன.

உத்தரகாண்ட் சட்டமன்றத்தில் 7 2 2024 அன்று நிறைவேற்றப்பட்ட 13 3 2024 அன்று குடியரசுத் தலைவரால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ள உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம் 2024 கொண்டுள்ள அபாயகரமான கூறுகளையும் அரசியல் சாசனம் குடிமக்களுக்குத் தந்துள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் ஆயுதமாக ஆதிக்க சக்திகள் அதை கையில் எடுத்திருப்பதையும் முதலமைச்சரிடம் குழு எடுத்துரைத்தது.

உத்தரகாண்ட் பாஜக அரசு கொண்டு வந்துள்ள பொது சிவில் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கி உள்ள அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்நோக்கத்தோடு இயற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு மட்டுமல்ல அதற்கு வெளியே வாழும் அம்மாநிலத்தவருக்கும் பொருந்தும் என்கிறது.

திருமணம் மணவிலக்கு ஆகியவற்றில் இஸ்லாமியச் சட்டங்களுக்கு நேர் எதிரான கூறுகளை இச்சட்டம் கொண்டிருக்கிறது

சமய சார்பற்றத்தன்மை, சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி ஆகியவற்றில் இந்தியாவுக்கே முன்மாதிரியான ஆட்சியை நடத்தி வரும் தங்கள் இவ்விரு விவகாரங்களிலும் தலையிட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் காக்கவும் சட்டங்களுக்கு பாசிச வாதிகள் ஏற்படுத்தி உள்ள நெருக்கடியிலிருந்து மீட்கவும் உடனடியாக ஆவணம் செய்ய வேண்டும் என்று குழு முதலமைச்சரைக் கேட்டுக் கொண்டது.

20 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இச்சந்திப்பில் மிக பொறுமையாக முதலமைச்சர் குழுவின் கருத்துகளை கேட்டார். பொது சிவில் சட்டம் திணிப்பதை எதிர்த்து கடந்த ஆண்டு ஜூலை 13 அன்று பிரதமருக்கும், சட்ட ஆணையத்தின் தலைவருக்கும் தான் கடிதம் எழுதியதை குறிப்பிட்டார். முஸ்லிம் சமுதாயத்துடன் என்றென்றும் தான் உறுதுணையாக இருப்பேன் என்றும் முதலமைச்சர் உறுதி அளித்தார்.

சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாநிலங்களவை உறுப்பினர் எம் எம் அப்துல்லா, தலைமை செயலாளர் திரு முருகாணந்தம் இ.அ.ப. பிற்படுத்தப்பட்டோர் துறை அரசு செயலாளர் விஜயராஜ்குமார் இ.அ.ப., தமிழ்நாடு வக்ப் வாரியத்தின் தலைமை செயல் அலுவலர் தாரேஷ் அஹ்மது இ.அ.ப. உள்ளிட்ட அரசு அலுவலர்களும் இச்சந்திப்பில் உடன் இருந்தனர்.

Dr. MH. Jawahirullah

Post a Comment

0 Comments