Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



புத்தாய்வு திட்டத்தின் கீழ் தேர்வான 25 இளம் வல்லுநர்களுக்கு துணை முதலமைச்சர் வாழ்த்து...!



தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டத்தின் கீழ் 2024-26 –ம் ஆண்டிற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 25 இளம் வல்லுநர்களுக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசின் பல முக்கிய மற்றும் முன்னுரிமைத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் பல்வேறு தொழில் மற்றும் கல்விப் பின்புலத்தைச் சார்ந்த இளம் வல்லுநர்களின் திறமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்காக, தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை கல்விப் பங்காளராகக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இத்திட்டத்தின் கீழ் (2022 – 24) ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட 30 இளம் வல்லுநர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்களில் 11 நபர்கள் பல்வேறு உயர் பணி வாய்ப்புகள் கிடைத்து சென்ற நிலையில், இரண்டு வருடங்களை பூர்த்தி செய்த 19 நபர்களுக்கு "பொதுக் கொள்கை மற்றும் மேலாண்மையில்" முதுகலைச் சான்றிதழ்கள் மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 25.10.2024 அன்று வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2024-26 ஆண்டுகளுக்கு செயல்படுத்த 25 இளம் வல்லுநர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, கணினி அடிப்படையிலான முதற்கட்ட தேர்வு, விரிவான தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இத்திட்டத்திற்காக 15.09.2024அன்று நடைபெற்ற முதற்கட்டத் தேர்வில் 5,327 நபர்கள் பங்கேற்றனர். முதல் கட்ட தேர்வில், தேர்வான 501 நபர்களுக்கு இரண்டாம் கட்டமாக விரிவான எழுத்துத் தேர்வு 6.10.2024 அன்று நடத்தப்பட்டது. 

அதிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 177 நபர்களுக்கு மூன்றாம் கட்டமாக நேர்முகத் தேர்வு 19.11.2024, 20.11.2024 மற்றும் 21.11.2024 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டது. நேர்முகத் தேர்வில் தேர்வு செய்யப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சரின் புத்தாய்வுத் திட்டம் 2024 - 26-ன் கீழ் பணியாற்றிடும் வாய்ப்பினை பெற்ற 25 இளம் வல்லுநர்களின் இறுதிப்பட்டியல் 22.11.2024 அன்று வெளியிடப்பட்டது.

Post a Comment

0 Comments