Trending

6/recent/ticker-posts

Header Ads Widget



இலங்கை - தென் ஆபிரிக்க டெஸ்ட் தொடர் இரண்டு அணிகளுக்கும் நொக் அவுட்டுக்கு ஒப்பானது



இலங்கைக்கும் தென் ஆபிரிக்காவுக்கும் இடையிலான 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடர் டேர்பனில் நடைபெறவுள்ள முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியுடன் இன்று ஆரம்பமாகிறது.

இந்த போட்டியில் இலங்கை முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

நடப்பு தொடரில் இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை குறிவைத்து விளையாடவுள்ளதால் இத் தொடர் விறுவிறுப்பும் பரபரப்பும் மிக்கதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இரண்டு அணிகளுக்கும் இந்தத் தொடர் கிட்டத்தட்ட கால் இறுதிக்கு அல்லது நொக் அவுட்டுக்கு ஒப்பானதாக அமையவுள்ளது.

உலக டெஸ்ட் சம்பின்ஷிப் அணிகள் நிலையில் இலங்கை 3ஆம் இடத்திலும் தென் ஆபிரிக்கா 5ஆம் இடத்திலும் இருக்கின்றன.

இந்தத் தொடரை மிகுந்த நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவுள்ளதாக அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா தெரிவித்துள்ளார்.

'எமது அணியில் நான் உட்பட ஒரு தொகுதியினர் தென் ஆபிரிக்காவின் முன்னாள் வீரர் நீல் மெக்கென்ஸி இடம் பயிற்சிகளில் ஈடுபட்டோம். இந்தப் பயிற்சிகளின்போது தென் ஆபிரிக்காவின் சூழ்நிலை, ஆடுகளங்களின் தன்மை, ஆரம்ப தினங்களில் வேகப்பந்து வீச்சுக்கும் பிந்தைய நாட்களில் சுழல்பந்துவீச்சுக்கும் சாதகமாக அமையக்கூடிய ஆடுகளம் போன்ற நுட்ப விடயங்களை நாங்கள் நன்கு அறிந்துகொண்டதுடன் அதற்கேற்ப எங்களைப் பழக்கப்படுத்திக்கொண்டுள்ளோம். எனவே இந்தத் தொடரை எம்மால் நம்பிக்கையுடன் எதிர்கொள்ள முடியும்.

'நாங்கள் விளையாடவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளும் எமக்கு வெற்றிகளை ஈட்டிக்கொடுத்த விளையாட்டரங்குகளிலேயே நடைபெறவுள்ளன. மேலும் 2019இல் தென் ஆபிரிக்க மன்னில் தொடர் வெற்றியை ஈட்டி சாதித்த இலங்கை அணியில் இடம்பெற்ற 7 வீரர்கள் தற்போதைய குழாத்தில் இடம்பெறுகின்றனர். அவர்களது அனுபவம் அணிக்கு மிகுந்த வரப்பிரசாதமாக அமையும்.

'முதலாவது டெஸ்ட் போட்டிக்கான இறுதி அணியை நாங்கள் இன்னும் தீர்மானிக்கவில்லை. பெரும்பாலும் 3 வேகப்பந்துவீச்சாளர்கள் 2 அல்லது ஒரு சுழல்பந்துவீச்சாருடன் விளையாடுவோம் என்றே கருதுகிறேன். ஒரு சுழல்பந்துவீச்சாளர் விளையாடினால் நானும் சுழல்ந்துவீச்சில் பங்காற்றுவேன்' என தனஞ்சய டி சில்வா நேற்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, டேர்பன், கிங்ஸ்மீட் விளையாட்டரங்கில் தென் ஆபிரிக்காவை 3 டெஸ்ட் போட்டிகளில் எதிர்த்தாடிய இலங்கை, 2இல் வெற்றிபெற்றதுடன் ஒரு போட்டியை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

இரண்டு அணிகளுக்கும் இடையில் முதன்முதலில் 2000ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கெரி கேர்ஸ்டன் தலைமையிலான தென் ஆபிரிக்கா ஆதிக்கம் செலுத்தியபோதிலும் அப் போட்டியை இலங்கை வெற்றிதோல்வியின்றி முடித்துக்கொண்டது.

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக 2011இல் இதே அரங்கில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் திலக்கரட்ன டில்ஷான் தலைமையிலான இலங்கை அணி, ரங்கன ஹேரத்தின் அற்புதான சுழல்பந்துவீச்சு உதவியுடன் 208 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

எட்டு வருடங்கள் கழித்து 2019இல் திமுத் கருணாரட்ன தலைமையிலான இலங்கை அணி ஒரு விக்கெட்டினால் வெற்றிபெற்றிருந்தது. அப் போட்டியில் குசல் பெரேரா (153 ஆ.இ.), விஷ்வா பெர்னாண்டோ (27 பந்துகளில் 6 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத கடைசி விக்கெட்டில் பகிர்ந்த 78 ஓட்டங்கள் இலங்கைக்கு பரபரப்பான வெற்றியை ஈட்டிக்கொடுத்திருந்தது.

இதேவேளை, 2019இல் தென் ஆபிரிக்காவுடனான தொடரை வெற்றிகொண்ட போதிலும் இது மற்றொரு புதிய தொடர் என்பதால் பொறுமையுடனும் நிதானத்துடனும் அதேவேளை நம்பிக்கையுடனும் எதிர்கொள்ள தமது அணி தயாராக இருப்பதாக அந்தத் தொடரில் இலங்கை அணியில் இடம்பெற்ற தனஞ்சய டி சிலவா மேலும் குறிப்பிட்டார்.

தென் ஆபிரிக்காவை அதன் சொந்த மண்ணில் வெற்றிகொண்ட ஒரே ஒரு ஆசிய நாடு என்ற பெருமைக்குரிய சாதனையை இந்தத் தொடரிலும் தக்கவைத்துக்கொள்ள இலங்கை முயற்சிச்கவுள்ளது.

அத் தொடரில் விளையாடிய திமுத் கருணாரட்ன, ஓஷத பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், சமகால அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா, லசித் எம்புல்தெனிய, கசுன் ராஜித்த, விஷ்வா பெர்னாண்டோ ஆகிய 7 வீரர்கள் தற்போதைய இலங்கை குழாத்தில் இடம்பெறுகின்றனர்.

தற்போதைய இலங்கை அணி குறித்து பேசிய தனஞ்சய டி சில்வா,

'இந்த வருடம் இலங்கை அணிக்கு ஓர் அற்புதமான வருடமாகும். இந்த வருடம் எமது வெற்றி நடையை தொடர்வது முக்கியம். ஒவ்வொரு டெஸ்டும் எமக்கு முக்கியமானது. அதிலும் அந்நிய மண்ணில் வெற்றிகொள்வது என்பது பெருமைக்குரியது. இங்கிலாந்துடனான கடைசி டெஸ்டில் வெற்றிபெற்றது எமக்கு பெருமை தருகிறது. ஆனால், தொடர் தோல்வி ஏமாற்றம் அளித்தது. எமது துடுப்பாட்டம் தொடர்ச்சியாக சிறப்பாக அமைந்திருந்ததுடன் பந்துவீச்சும் திறமையாக இருந்தது. எனவே இந்தத் தொடரிலும் நாங்கள் முழுத் திறமையுடன் விளையாடுவோம்' என்றார்.

இதேவேளை, வெகப்பந்துவீச்சுக்கு தம்மைத் தயார்படுத்திக்கொள்ளும் திறமை இலங்கை அணியிடம் இருப்தாக தென் ஆபிரிக்க அணித் தலைவர் டெம்பா பவுமா தெரிவித்தார்.

கமிந்த மெண்டிஸின் திறமையையும் அவர் பாராட்டத் தவறவில்லை.

இன்றைய போட்டியில் விளையாடவுள்ள வீரர்கள்:

இலங்கை: திமுத் கருணாரட்ன, பெத்தும் நிஸ்ஸன்க, தினேஷ் சந்திமால், ஏஞ்சலோ மெத்யூஸ், கமிந்து மெண்டிஸ், தனஞசய டி சில்வா (தலைவர்), குசல் மெண்டிஸ் (விக்கெட் காப்பாளர்), ப்ரபாத் ஜயசூரிய, விஷ்வா பெர்னாண்டோ, அசித்த பெர்னாண்டோ, லஹிரு குமார.

தென் ஆபிரிக்கா: ஏய்டன் மாக்ராம், டோனி டி ஸோஸி, ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ், டெம்பா பவுமா (தலைவர்), டேவிட் பெடிங்ஹாம், கய்ல் வெரின் (விக்கெட்காப்பாளர்), மாக்கோ ஜென்சன், வியான் முல்டர், ஜெரால்ட் கோயெட்ஸீ, கேஷவ் மஹாராஜ், கெகிசோ ரபாடா.

Post a Comment

0 Comments