
கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் காலிமுகத்திடல் கோட்டா கோ கம போராட்டத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளில் 31 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்தில் இந்த விடயத்தினை நேற்று அறிவித்துள்ளார்.
அதற்கமைய, குறித்த சந்தேகநபர்களுக்கு எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்ப்பதாகவும் சட்டமா அதிபர் சார்பில் மன்றில் முன்னிலையான அரச சட்டத்தரணி சஜித் பண்டார, மன்றுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.
முன்னதாக, கோட்டா கோ கம போராட்டம் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலமும், சட்டம் ஒழுங்கை நடைமுறைப்படுத்தத் தவறியதன் மூலமும் காவல்துறை உள்ளிட்ட பிரதிவாதிகள் தமது அடிப்படை மனித உரிமைகளை மீறியுள்ளதாகத் தீர்ப்பு வழங்குமாறு கோரி போராட்டக்காரர்கள் குழுவினால் 5 அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
குறித்த மனுக்கள் மீதான விசாரணை நேற்று இடம்பெற்ற போதே அரச சட்டத்தரணி இந்த அறிவிப்பை வெளியிட்டார். அடையாளம் காணப்பட்ட சந்தேகநபர்களில் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் அடங்குவதாக அரச சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சம்பவம் நடந்தபோது காவல்துறை செயலற்ற நிலையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டதாக மனுதாரர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் எடுத்துரைத்தனர்.



0 Comments