Trending

6/recent/ticker-posts

Live Radio

ஊக்க மருந்து பாவனையில் இந்தியா தொடர்ந்து முதலிடம்...




சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ஊக்கமருந்து பாவிப்பவர்களின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

 
இது விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. 
 
சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கையின்படி, இந்தியாவின் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் 7,113 இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளைச் சேகரித்தது. 
 
இதில் 260 மாதிரிகள் ஊக்கமருந்து பாவனையை உறுதிப்படுத்தியுள்ளன. 
 
இந்தப் பட்டியலில் பிரான்ஸ் 91 வழக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி 85 வழக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. 
 
ரஷ்யா மற்றும் அமெரிக்கா தலா 76 வழக்குகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. இந்தியாவில் கடந்த ஆண்டில் ஊக்கமருந்து பாவனை அதிகம் கண்டறியப்பட்ட துறைகளாக தடகளம் 76 வழக்குகள், பழுதூக்குதல் 43 வழக்குகள், மல்யுத்தம் 29 வழக்குகள் உள்ளன. 
 
அண்மையில் பாரிஸ் ஒலிம்பிக் காலிறுதி வரை முன்னேறிய மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹுடா ஊக்கமருந்து சோதனையில் சிக்கி இடைநீக்கம் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
 
அத்துடன், அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளின் போது, ஊக்கமருந்து அதிகாரிகள் வந்ததைக் கண்டு பல வீரர்கள் மைதானத்தை விட்டு ஓடிய சம்பவங்களும் பதிவாகியுள்ளன. 
 
இந்தியா 2030 ஆம் ஆண்டு பொதுநலவாயப் போட்டிகளையும், 2036 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளையும் நடாத்தத் திட்டமிட்டுள்ளது. 
 
இவ்வாறான சூழலில், ஊக்கமருந்து பாவனை அதிகரித்துள்ளமை சர்வதேச ஒலிம்பிக் குழுவிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தனது நற்பெயரைத் தக்கவைக்க இந்தியா தனது சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என சர்வதேச ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் வலியுறுத்தியுள்ளது. 
 
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள இந்திய ஊக்கமருந்து எதிர்ப்பு முகவரகம் , தாங்கள் சோதனைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாகவும், விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளது. 
 
மேலும், ஊக்கமருந்து பாவனையைக் கட்டுப்படுத்த புதிய தேசிய சட்டமூலம் ஒன்றையும் இந்திய அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments