Trending

6/recent/ticker-posts

Live Radio

இலங்கைக்கான உதவி - பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு இந்தியா பதில்....!



இலங்கைக்கான மனிதாபிமான உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற பாகிஸ்தான் விமானத்திற்கு, வான்வெளியில் பறப்பதற்கான அனுமதியை புது டெல்லி தாமதித்ததாகப் பாகிஸ்தான் விடுத்த குற்றச்சாட்டை இந்தியா முழுமையாக நிராகரித்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டை "அபத்தமானது" மற்றும் "தவறான தகவல்" என்று இந்தியா கண்டித்துள்ளது.

வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஒரு அறிக்கையில் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

வான்வெளியில் பறப்பதற்கான அனுமதி கோரிக்கை, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்திற்கு டிசம்பர் 1ஆம் திகதி பிற்பகல் 1:00 மணியளவில் கிடைக்கப்பெற்றது.

இந்திய அரசாங்கம் கோரிக்கையை "விரைவாக" பரிசீலித்து, அதே நாள் மாலை 5:30க்கு பாகிஸ்தான் சமர்ப்பித்த பயணத் திட்டத்தின்படி ஒப்புதலை வழங்கியது.

முன்னதாக, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், இந்தியா உரிய நேரத்தில் அனுமதி வழங்கத் தவறியதால், விமானம் 60 மணி நேரத்திற்கும் மேலாகக் காத்திருக்க நேரிட்டதாகக் குற்றம் சாட்டியது.

அத்துடன், இந்தியா வழங்கிய வரையறுக்கப்பட்ட அனுமதி "செயற்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு ஒவ்வாதது" என்றும் இஸ்லாமாபாத் மேலும் குற்றம் சாட்டியது.

இந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, நடந்து வரும் அனர்த்தங்களுக்கு மத்தியில் இலங்கைக்கு முழுமையாக ஆதரவளிப்பதில் உறுதி பூண்டுள்ளதாகவும், "கிடைக்கக்கூடிய அனைத்து வழிகளிலும்" உதவிகளை வழங்குவதாகவும் வலியுறுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments