Trending

6/recent/ticker-posts

Live Radio

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைககள் தொடர்பில்...!



விசாரணைகளில் அரசாங்கம் சாதகமான முன்னேற்றகரமான போக்கைக் கடைப்பிடித்து வருவதாகவும் பேராயர் தெரிவிப்பு

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற வகையில் உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் சம்பவத்தில் தவறு செய்தவர்கள் எவரானாலும், அவர்கள் உயர் அதிகாரிகளாகவோ அல்லது யுத்த வீரர்கள் என்று போற்றப்படுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் தற்போதைய அரசாங்கம் சாதகமான போக்கைக் கடைப்பிடித்து வரும் நிலையில், சில அரச அதிகாரிகள் அதனை சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் பேராயர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இந்த தாக்குதலுக்குப் பின்னணியில் அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்திகள் உள்ளனவா என்ற கேள்வி எழுவதாகத் தெரிவித்த பேராயர், அவ்வாறில்லையெனில் உண்மையைத் தேடும் பயணத்திற்கு ஏன் இந்தளவு தடைகளை ஏற்படுத்துகிறார்கள் என்றும் கேள்வியெழுப்பினார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வழங்கிய வாக்குறுதியை யதார்த்தமாக்கி, முழுமையான, வெளிப்படையான விசாரணையை நடத்தி உண்மை நிலையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது ஆட்சியாளர்களின் கடமையாகும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சட்டத்தின் முன் அனைவரும் சமம். தவறு செய்தவர்கள் எவரானாலும், அவர்கள் உயர் அதிகாரிகளாகவோ அல்லது போர் வீரர்கள் என போற்றப்படுபவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு எதிராகச் சட்டம் பாய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் நினைவுத் திருப்பலி நேற்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது.இந்த நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2024 ஒக்டோபர் 6ஆம் திகதி ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டிய ஆலயத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்த போது, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மை, காலவோட்டத்தில் மறைந்துபோக இடமளிக்கப் போவதில்லை என உறுதியளித்திருந்தார்.

அந்த வாக்குறுதியை யதார்த்தமாக்கி முழுமையான, வெளிப்படையான, உண்மையின் அடிப்படையிலான விசாரணையை நடத்தி உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேற்படி குண்டுத் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் கூட ஆழமாக ஆராய முடியாமல் போன சில விடயங்கள் தொடர்பில் குறிப்பிட்டுள்ள அவர், ‘அபு ஹிந்த்’ என்பவர் யார் என்பதைக் கண்டறிவது முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய பேராயர், சஹ்ரானுடன் தொடர்புகளைப் பேணியதாகக் கூறப்படும் மேற்படி நபர் தொடர்பான தகவல்களைத் தேடுவது மிகவும் அவசியமானது. அபு ஹிந்தின் அடையாளம் தொடர்பில் சி.ஐ.டி விசாரணை நடத்துவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கப்பட்டது.

அப்போதைய அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவின் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியில் காணப்பட்ட அனைத்து தரவுகளும் அழிக்கப்பட்டுள்ளதாக சாட்சியங்கள் பதிவாகியுள்ளன. இதன் மூலம் நிலந்த ஜயவர்தன வேண்டுமென்றே தாக்குதல் குறித்த உண்மைத் தகவல்களை மறைத்தாரா? அப்படியென்றால் அவர் ஏன் அவ்வாறு செய்தார்? என்பதும் கேள்விக்குறியே.

இந்தக் கொடூரமான கொலைகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் யார் என்பதை எமக்கு வெளிப்படுத்துங்கள். இலங்கையில் பல தசாப்தங்களாக இடம்பெற்ற பல்வேறு கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் படுகொலைகளுக்குப் பின்னணியிலுள்ள நோக்கம் என்ன?

அவற்றைச் செய்தவர்கள் யார் என்பதைத் தேடிக் கண்டறியாமல் அனைத்தும் காலவோட்டத்தில் மறைந்துபோக அனுமதிப்பது நமது நாட்டில் அண்மைக்காலத்தில் உருவாகியுள்ள மிக ஆபத்தான போக்காகும். 70களில் ஆரம்பமான இது, அண்மைக்காலம் வரை நீடித்த ஒரு தேசிய பேரழிவாகும்.

இந்த பாரிய விழுமியச் சீரழிவு காரணமாக, ஒழுக்கம், சட்டத்திற்கு மதிப்பளிக்கும் உயரிய பண்பு மற்றும் நாகரீகமான நடத்தை முறை என்பன எமது நாட்டை விட்டு வெளியேறிவிட்டன.

இவ்வாறானதொரு சூழலில் இலங்கையில் கடந்த 4 தசாப்த காலப்பகுதியில் இடம்பெற்ற கொலைகள், காணாமல் ஆக்கப்படுதல்கள் மற்றும் ஊழல்கள் தொடர்பில் நேர்மையான விசாரணைகளை முன்னெடுப்பது அரசியல் தலையீடுகள் மற்றும் பொய்யான செயற்பாடுகளினால் கடினமாகியுள்ளது என்றே கூறவேண்டும். அப்பாவி மக்களின் இரத்தம் நீதிக்காகக் குரல் கொடுத்துக் கொண்டிருப்பதாகவும், கடவுள் ஒருநாள் நிச்சயமாகத் தீர்ப்பு வழங்குவார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments