Trending

6/recent/ticker-posts

Live Radio

கல்வி அமைச்சின் செயலாளரும் சந்தேகநபரா...?






புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ் தரம் 6 மாணவர்களுக்காக வெளியிடப்பட்ட ஆங்கில மொழிப் பாடத் தொகுதிகளில், மாணவர்களை ஆபாச இணையத்தளம் ஒன்றிற்கு வழிநடத்தும் இணைய முகவரி அச்சிடப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த நுகேகொடை நீதவான் ருவந்திகா மாரசிங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.

இந்தச் சம்பவத்தில் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவவுக்குத் தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால், அவரைச் சந்தேகநபராகப் பெயரிட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த ஆபாச இணையத்தள முகவரி பாடத் தொகுதிகளில் திட்டமிட்டுச் சேர்க்கப்பட்டதா, தவறுதலாக நடந்ததா அல்லது கவனக்குறைவால் நேர்ந்ததா என்பதை அறிய விரிவான விசாரணையை நடத்துமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆபாச இணைய முகவரியைக் கொண்டுள்ளதாகக் கூறப்படும் ஆசிரியர் பயிற்சி கையேடு மற்றும் திருத்தங்களுக்குப் பிறகு அச்சிடப்பட்ட பாடத் தொகுதிகளை நீதிமன்றப் பொருட்களாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

இச்சம்பவம் தொடர்பாகப் புகார் அளித்த அனைவரிடமிருந்தும் வாக்குமூலங்களைப் பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் கல்வியியல் வல்லுநர்கள் சங்கம் மற்றும் தர அதிபர்கள் சங்கம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை முன்வைத்தனர்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணையை வேண்டுமென்றே மெதுவாக நடத்துவதாகவும், இது குற்றவாளிகள் ஆதாரங்களை அழிக்க வழிவகுக்கும் என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி மைத்திரி குணரத்ன குற்றம் சாட்டினார்.

இந்தத் தவறான அச்சிடுதல் காரணமாக அரசுக்கு 60 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

அமைச்சின் செயலாளர் கலுவெவ அளித்த முறைப்பாட்டை மட்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரிப்பதாகவும், அவருக்கு முன்னதாக ஏனையோர் அளித்த முறைப்பாடுகள் புறக்கணிக்கப்படுவதாகவும் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டினர்.

தற்போது வரை 35 பேரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாகவும் பாடத் தொகுதிகளைத் தயாரிப்பதில் உதவிய தேசிய கல்வி நிறுவனத்தின் இரண்டு விரிவுரையாளர்களிடம் நீண்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விரிவுரையாளர்களுக்கும், தேசிய கல்வி நிறுவனத்தின் சிரேஷ்ட உதவி பணிப்பாளருக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் மற்றும் இலத்திரனியல் உபகரணங்கள் தடயவியல் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments