Trending

6/recent/ticker-posts

Live Radio

பிரித்தானிய முன்னாள் தூதுவர் லோர்ட் மண்டல்சன் தொழிற்கட்சியில் இருந்து ராஜினாமா...!



அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீனுடனான தொடர்புகள் மற்றும் அவரிடமிருந்து நிதி பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் காரணமாக, லோர்ட் மண்டல்சன் பிரித்தானியத் தொழிற்கட்சியின் உறுப்புரிமையில் இருந்து விலகியுள்ளார்.

தனது தொடர்புகளால் கட்சிக்கு மேலதிக சங்கடங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த முடிவை எடுத்ததாக அவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அமெரிக்க நீதித்துறை கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்ட எப்ஸ்டீன் தொடர்பான ஆவணங்களில் மண்டல்சனின் பெயர் இடம்பெற்றுள்ளது.

2003 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் எப்ஸ்டீனின் ஜேபி மோர்கன் வங்கிக் கணக்குகளில் இருந்து தலா 25,000 டொலர்கள் வீதம், மூன்று கட்டங்களாக மொத்தம் 75,000 டொலர்கள் மண்டல்சனுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அந்த ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

இதில் ஒரு பணப்பரிமாற்றம் அவரது அப்போதைய துணையின் வங்கிக் கணக்கிற்கு 'பயனாளி' என்ற பெயரில் அனுப்பப்பட்டுள்ளது.

ஏனைய இரண்டு பரிமாற்றங்கள் மண்டல்சனின் பெயரிலேயே நேரடியாக அனுப்பப்பட்டுள்ளன.

"20 ஆண்டுகளுக்கு முன்பு எப்ஸ்டீன் எனக்கு பணம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எனக்கு நினைவோ அல்லது பதிவுகளோ இல்லை. இவை தவறானவை என்றே நம்புகிறேன்.

எனினும், இது குறித்து நான் விசாரணை செய்ய வேண்டியுள்ளது. இந்த நேரத்தில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்த விரும்பாததால் நான் விலகுகிறேன்" தொழிற்கட்சியின் பொதுச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மண்டல்சன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அவர் தனது நிபந்தனையற்ற மன்னிப்பையும் மீண்டும் ஒருமுறை பதிவு செய்துள்ளார்.

எப்ஸ்டீனுடனான தொடர்புகள் ஏற்கனவே அம்பலமானதால், கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் பதவியில் இருந்து பிரதமர் கீர் ஸ்டார்மரால் மண்டல்சன் நீக்கப்பட்டார்.

எப்ஸ்டீனின் வேண்டுகோளுக்கு இணங்க, 2009 ஆம் ஆண்டு வங்கி அதிகாரிகளின் போனஸ் மீதான வரி தொடர்பான அரசாங்கக் கொள்கையை மாற்ற மண்டல்சன் முயன்றதாக மின்னஞ்சல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

எப்ஸ்டீன் கோப்புகளில் மண்டல்சன் உள்ளாடைகளுடன் ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

அந்தப் புகைப்படம் எங்கு, எப்போது எடுக்கப்பட்டது என்பது தனக்குத் தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

மண்டல்சன் தானாக முன்வந்து ராஜினாமா செய்ததை விட, அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்க வேண்டும் எனப் பழமைவாதக் கட்சி விமர்சித்துள்ளது.



எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தத் தகவல்களால் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும், மண்டல்சன் விலகியது சரியான முடிவு என்றும் தொழிற்கட்சி எம்.பி.க்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0 Comments