
பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள்:
நாட்டின் சில பகுதிகளில் வெப்பமான வானிலை அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முனனெச்சரிக்கை நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வானிலை அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைதினம் (06) சப்ரகமுவ மாகாணம் மற்றும் குருணாகல், கம்பஹா, மொனராகலை ஆகிய மாவட்டங்களில், மனித உடலில் உணரப்படும் வெப்பத்தின் அளவான ‘வெப்பச் சுட்டெண்’ (Heat Index), ‘எச்சரிக்கை மட்டம்’ (Caution level) வரை உயர வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளிமண்டல ஈரப்பதன் மற்றும் நிலவும் அதிகபட்ச வெப்பநிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் இந்த வெப்பச் சுட்டெண், உடலுக்கு உண்மையில் உணரப்படும் வெப்பத்தைக் குறிப்பதாகும்.
இந்தச் சுட்டெண் 39 முதல் 45 வரையான எச்சரிக்கை மட்டத்தில் இருக்கும்போது, நீண்ட நேரம் வெயிலில் வெளிப்படுவதால் உடல் சோர்வு ஏற்படுவதுடன், தசைப்பிடிப்பு (Heat cramps) போன்ற பாதிப்புகள் ஏற்படக்கூடும் என சுகாதார அமைச்சின் ஆலோசனையின் கீழ் தயாரிக்கப்பட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இத்தகைய வெப்பமான சூழலில் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க சில அத்தியாவசிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
வேலைத் தளங்களில் பணிபுரிவோர் போதுமான அளவு குடிநீரை அருந்துவதுடன், அடிக்கடி நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.
வீடுகளுக்குள் இருக்கும் போது முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது அவசியமாகும்.
எக்காரணம் கொண்டும் சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் எனப் பெற்றோர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், திறந்தவெளிகளில் அதிக களைப்பைத் தரும் வேலைகளைக் குறைத்துக்கொள்வது சிறந்தது.
மேலும், வெண்ணிற அல்லது மென்மையான நிறங்களைக் கொண்ட மெல்லிய ஆடைகளை அணியுமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்களுக்கு 011-7446491 என்ற தொலைபேசி இலக்கத்தை அல்லது சுகாதார அமைச்சின் அனர்த்தத் தயார்ப்படுத்தல் பிரிவைத் தொடர்பு கொள்ளலாம்.



0 Comments