
மேற்காசியாவில் புதிதாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் மீறி வருவதாகவும், சர்வதேச சட்டங்களுக்கு முரணாக லெபனான் மீது தாக்குதல் நடத்துவதாகவும் ஸ்பெயின் வெளிவிவகார அமைச்சர் ஜோஸ் மானுவல் அல்பாரெஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
ஈரான் மற்றும் லெபனான் விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் நடவடிக்கைகளைத் தொடர்ந்து விமர்சித்து வரும் மேற்கத்திய நாடுகளில் ஒன்றாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. இந்த மோதல்களை "பொறுப்பற்றது மற்றும் சட்டவிரோதமானது" என குறிப்பிட்டுள்ள மாட்ரிட் நிர்வாகம், தனது வான்பரப்பைப் பயன்படுத்தவும் தடை விதித்துள்ளது.
பாராளுமன்றில் உரையாற்றிய அமைச்சர் அல்பாரெஸ்,
"நேற்று இஸ்ரேல் எவ்வாறு போர்நிறுத்தத்தை அலட்சியம் செய்தது என்பதையும், சர்வதேச சட்டத்தை மீறி லெபனான் மீது நூற்றுக்கணக்கான குண்டுகளை வீசியதையும் நாம் கண்டோம்." எனத் தெரிவித்துள்ளார்.
மேற்காசியாவில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியின் ஒரு பகுதியாக, ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தை மீண்டும் திறப்பதாக ஸ்பெயின் அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அல்பாரெஸ்,
"எங்கள் தூதர் மீண்டும் தெஹ்ரானுக்குத் திரும்பி தனது பொறுப்புகளை ஏற்குமாறும், தூதரகத்தை மீண்டும் திறக்குமாறும் நான் அறிவுறுத்தியுள்ளேன். ஈரானிய தலைநகரில் இருந்தும் அமைதிக்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுக்க நாங்கள் விரும்புகிறோம்," எனத் தெரிவித்துள்ளார்.



0 Comments